நடைப்பயணம் தெரியும்; குடைப் பயணம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

புரட்டாசி – திருப்பதி பிரம்மோத்ஸவ கொண்டாட்டம்
Tirupati Kudai
Tirupati Kudai
Published on

நூற்றைம்பது ஆண்டுகளாக வருடம் தவறாமல் ஒவ்வொரு புரட்டாசி மாதத்தின்போதும் சென்னையிலிருந்து பதினொரு வெண்பட்டுக் குடைகள் (திருப்பதி) திருமலையைச் சென்றடைகின்றன. இச்சமயத்தில் சென்னை நகரெங்கும் ‘இன்று, திருப்பதி குடைகள் யானை கவுனியைத் தாண்டுகிறது‘ என்ற தகவல் தரும் சுவரொட்டிகள் காணப்படும். 

யானை, கவுனியைத் தாண்டுகிறதா? இது என்ன சமாசாரம்?

அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் இந்தக் குடைகளின் சரித்திரத்தைப் படிக்கலாம் வாங்க.

சென்னையிலுள்ள ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அமைப்பினர்தான், திருமலையில், பிரமோத்ஸவ விழாவில் சமர்ப்பிப்பதாக நேர்ந்துகொண்ட, நூறாண்டுகளைக் கடந்த இந்த சம்பிரதாயத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

பிரம்மோத்ஸவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே முகூர்த்த நாள், நேரத்தில் பூஜைகளை மேற்கொண்டு, குடைகளைத் தயாரிப்பார்கள். ஒவ்வொரு முறையும், பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை போன்ற புதிய பொருட்களைக் கொண்டே இவை உருவாகின்றன. இவை ஒவ்வொன்றும் சுமார் 7 அடி விட்டமும், அதே அளவு உயரமும் கொண்டவை. சென்னை கேசவப் பெருமாள் கோயில் வளாகத்தில் இக்குடைகளை உருவாக்குபவர்கள் மிகவும் ஆசாரமாக, சுத்தபத்தத்துடன், விரதம் மேற்கொண்டு, ஏழுமலையான் மீதான பக்தி சிரத்தையுடன் செயல்படுவார்கள். தயாரிப்பு முடிந்ததும், இவற்றுக்கு உரிய பூஜை, ஆராதனை என்று மரியாதை செய்வார்கள். பிறகு கந்தப்ப செட்டித் தெருவிலிருந்து, மேள தாளம், வேத பிரபந்த கோஷங்கள் முழங்க, கூடவே, ‘கோவிந்தா‘ நாமமும் அதிர, இவை திருப்பதி நோக்கிப் பயணப்படும்.

இந்த வருடம் அக்டோபர் 2, புதன்கிழமை அன்று புறப்படும் இந்தக் குடைகள் திங்கட்கிழமை 7ம் தேதி திருமலைக்குச் செல்லும். இவ்வாறு சென்னையில் பயணத்தை ஆரம்பிக்கும் குடைகள்தான் யானை கவுனியைத் தாண்டுகின்றன!

குடைகள் பயணிக்கின்றன, சரி, அது என்ன யானை, கவுனியைத் தாண்டுவது? 

யானை, கவுனியைத் தாண்டவில்லை!  யானைகவுனி என்பது வடசென்னையில் ஒரு பகுதி. அந்த காலத்தில் இப்பகுதியிலுள்ள கோயில் யானைகளை இந்த இடத்தில் வைத்துதான் பராமரிப்பார்களாம், அதனால் இந்தப் பெயர். 

ஆனால், குடைப் பயணத்தில் அதுவரை இயல்பான வேகத்தில் நடந்து வந்து கொண்டிருப்பவர்கள் இந்தப் பகுதி வந்ததும் வெகு வேகமாகக் கடந்து செல்கிறார்கள்.

இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

வேங்கடேசப் பெருமாள் தனது திருமணத்துக்காக குபேரனிடமிருந்து பொற்கழஞ்சுகள் கடனாகப் பெற்றிருந்தார். அன்று முதல் இப்போதுவரை தனது பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளால் அந்தக் கடனைத் தீர்க்க முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்! ஆனால், இவரிடமிருந்து கடனை வசூலிப்பதற்காக ஆங்காங்கே தனது பிரதிநிதிகளை நிறுத்தியிருந்தான் குபேரன். அப்படி ஒரு இடம்தான் இந்த யானைகவுனி! ‘அடடா, பெருமாள் வாங்கிய கடனை இந்தப் பிரதிநிதி கேட்டுவிடப் போகிறாரே, இவரிடமிருந்து தப்பிக்க வேண்டுமே‘ என்றுதான் பெருமாளின் பிரதிநிதிகளான பக்தர்கள், அதுவரை சொல்லி வந்திருந்த ‘கோவிந்தா, கோவிந்தா‘ நாமத்தை மேலும் உரத்தக் குரலில் சொல்லி, ஓட்டமாக ஓடி அந்த இடத்தைக் கடந்து விடுகிறார்களாம்!

Tirupati Kudai
Tirupati Kudai

வடசென்னையில் தொடங்கி, திருப்பதி செல்லும் வரை வழியெங்கும் இக்குடைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஏற்கெனவே தீர்மானிக்கப்படும் இடங்களில் இவற்றுக்கு நிவேதனம், கற்பூர ஆரத்தி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் என்று விநியோகித்துத் தம் பக்தியை அந்தந்தப் பகுதி பக்தர்கள் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கோயில்கள் செய்த கின்னஸ் சாதனைகள் தெரியுமா?
Tirupati Kudai

இந்தக் குடைகள் ஆதிசேஷனுக்கு நிகரான மகத்துவம் பெற்றவை. இவை பிரம்மோத்ஸவ கொண்டாட்டத்தில், கருட சேவை நாளில் மலையப்பனுக்கு நிழல் தரும். அதாவது உத்ஸவரான ஏழுமலையானை தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். அப்போது இந்தக் குடைகள் அவருக்கு முன்னும் பின்னுமாகப் பேரழகுடன் அணிவகுத்துச் செல்லும்.

இந்த பிரம்மோத்ஸவ வைபவத்தில் தமிழகத்திலிருந்து செல்லும் இன்னொரு பொருளும் இடம் பெறுகிறது.  ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், தான் சூடிக்கொண்டு, வடபத்ர சாயியான பெருமாளுக்குச் சூட்டினாளே, அந்த மாலைதான் அது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com