மூவரை வென்றான் குடைவரைக் கோவில் பற்றித் தெரியுமா?

குடைவரைக் கோவில்
குடைவரைக் கோவில்

மிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மூவரை வென்றான் என்ற கிராமம் அமைந்துள்ளது. இது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை செங்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள குன்றில் பாண்டியர்கால குடைவரைக் கோவில் மற்றும் வழி விடு முருகன் கோவிலும் உள்ளது.

குடைவரை கோவில் என்பது கட்டுமானங்கள் ஏதுமின்றி மலையை குடைந்து கட்டப்படுவதாகும். விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலும் கற்றளி கோவில்களே காணப்படும். இந்நிலையில் மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற மலைக் கொழுந்தீஸ்வரர் கோவில் மலையை குடைந்து கட்டப்பட்ட ஒரு குடைவரை கோவிலாகும்.

இக்கோவிலில் உள்ள மகா மண்டபம் மற்றும் அர்த்தமண்டபம் மட்டுமே கற்களை கொண்டு கட்டப்பட்டது. மற்றபடி கருவறை முழுவதும் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. மூலவரான சிவன் தாய்ப்பாறையிலேயே செதுக்கப்பட்டு அழகாக காட்சியை தருகிறார். கருவறைக்கு இடது புறம் விநாயகர் சிற்பமும் வலது புறம் ராஜ கோலத்தில் முருகனும், நடமாடும் நடராஜரின் சிற்பங்களும் மிக அழகாக புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வெளியே மரகதவல்லி அம்பாள், முருகன், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. மூவரை வென்றான் கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவிலை மொட்ட மலை என்று கூறினால் தான் அவ்வூர் மக்களுக்கு எளிதில் தெரிகின்றது. 

இக்கோவில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. கோவில் தூண்களில் காணப்படும் சிங்கங்களை வைத்து இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்றும், கருவறையில் உள்ள சதுர ஆவுடையில் அமைந்த லிங்கத்தை வைத்து இது பாண்டியர் கால கோவில் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கோவில் கருவறை
கோவில் கருவறை

இங்கு மலைக்கு மேல் அழகான சுனை ஒன்றுள்ளது. இந்த சுனை நீரைக் கொண்டு தான் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

சுனையில் இருந்து கோவில் கருவறை வரை 500 மீட்டருக்கு பாறைகளை வெட்டி பாதை அமைத்துள்ளனர். இக்கோவிலின் தல விருட்சமாக இலுப்பை மரம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
முதுமையைத் தள்ளிப்போட உதவும் 7 உணவுகள்!
குடைவரைக் கோவில்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது போல் ஆதி காலம் தொட்டு இந்த மலைக்கோயிலிலும் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதே போல் இங்கு 18 சித்தர்கள் குளிப்பதற்காக திருவோட்டு கேணி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் திருவிழா நடைபெறும்‌ அன்றைய தினம் விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், நடராஜப்பெருமான் ஆகியோர் சப்பரங்களில் மலையைச் சுற்றி கிரிவலம் வருவதும் இதனைக் காண பக்கத்தில் உள்ள ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் வருவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com