திருவண்ணாமலை என்றதும் நினைவிற்கு வருவது மலையே சிவனாக காட்சித்தருவதுதான். இக்கோவிலில் அருணாச்சலேஸ்வரர் நெருப்பு வடிவில் காட்சித்தருகிறார். இக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்த சிவனுக்கான திருத்தலமாகும். தினமும் எண்ணற்ற பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு விட்டு செல்கின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷியின் ஆசிரமமும் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். ரமணருக்கும், பாதாள லிங்கேஸ்வரருக்கும் உள்ள சம்பந்தம் என்னவென்று தெரியுமா?அதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம் வாங்க.
ஒருமுறை ரமண மகரிஷிக்கு மரணம் பற்றிய எண்ணம் தோன்றியபோது திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கே பாதாளலிங்கம் இருக்கும் குகைக்குள் சென்று தவம் புரிய ஆரம்பித்தார். அப்படி அவர் நாட்கணக்கில் மெய்மறந்து தவமிருந்தக் காரணத்தால், அங்கிருக்கும் பூச்சிகள் எல்லாம் அவரது உடலைக்கடித்து புண்ணாக்கியது.
ஆனால், ரமண மகரிஷி எதையும் உணரவும் இல்லை, அசையவும் இல்லை. இப்படி பலநாட்களாக தவத்திலே இருந்தார் ரமண மகரிஷி. பூச்சிகள் கடித்த புண்களில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.
பிறகு சேஷாத்திரி ஸ்வாமிகள்தான் பலத்துறவிகளின் உதவியோடு பாதாளக் குகையிலிருந்து ரமண மகரிஷியை மீட்டு வெளியே கொண்டுவந்தார்.
திருவண்ணாமலை கோவிலில் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரம் கால் மண்டபம் அருகில் இருப்பது தான் பாதாள லிங்கம். இங்கே சிவபெருமான் பாதாள லிங்கேஸ்வரர் என்ற பெயரில் லிங்க வடிவில் காட்சித்தருகிறார்.
இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்றால், சில படிகள் பாதாளத்தில் இறங்கிச் சென்றுதான் வழிபடவேண்டும். இந்த லிங்கம் இருக்கும் சன்னதியில் அமர்ந்து தியானம் செய்தால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலையில் திரும்பிய இடமெல்லாம் லிங்கத்தைக் காணலாம். இக்கோவிலில் மொத்தம் 56 லிங்கங்களும் அதில் 11 லிங்கங்களுக்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மரண பயமோ அல்லது மனதில் ஏதேனும் பயம் இருப்பின் கண்டிப்பாக திருவண்ணாமலைக்கு சென்று பாதாள லிங்கேஸ்வரரை தரிசித்து வர அனைத்து பயங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.