
திருவண்ணாமலையில் உள்ள வடக்குக் கோபுரத்தை எத்தனையோ பேர் கட்ட முயற்சித்தும் முடியவில்லை. ஆனால், ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று 171 அடி உயமுள்ள கோபுரத்தை கட்டி முடித்தார். அதுவும் 18 ஆம் நூற்றாண்டில் என்பதை கேட்கும்போது அதிசயமாக உள்ளதல்லவா? எத்தனையோ மன்னர்கள் இந்த கோபுரத்தை கட்ட முயற்சித்து முடியவில்லை. ஆனால், சிவபெருமானின் அருளால் வடக்குக் கோபுரத்தை கட்டி முடித்தார் அம்மணியம்மாள். இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
திருவண்ணாமலை கோவிலின் வடக்குக் கோபுரத்தை கட்டுவதற்காக பொதுமக்கள், செல்வந்தர்கள், மைசூர் மன்னன் என்று எல்லோரிடமும் நிதி திரட்டி கோபுரத்தின் ஏழாவது நிலை வரை கட்டி முடித்து விடுகின்றார் அம்மணியம்மாள்.
மீதமுள்ள நாலு நிலைகளை கட்ட கையில் பணமில்லை. ‘அண்ணாமலையானே, எனக்கு வழிக்காட்டப்பா!’ என்று வேண்டுகிறார் அம்மணியம்மாள். அவரின் கனவில் வந்த சிவபெருமான், ‘நீ வேலையை தொடங்கு. வேலை முடிந்ததும் வேலையாட்களுக்கு விபூதியை அள்ளிக்கொடு மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.
சிவபெருமான் சொன்னதுபோல அடுத்தநாள் வேலை முடிந்ததும் விபூதியை அள்ளிக் கொடுக்கிறார் அம்மணியம்மாள். வீட்டிற்கு சென்றதும் அந்த பணியாளர்கள் விபூதியை பார்க்க எல்லாம் கூலித்தொகையாக மாறியிருக்கிறது. இப்படியே சிவபெருமானின் அருளால் திருவண்ணாமலையில் வடக்குக் கோபுரத்தை கட்டி முடிக்கிறார் அம்மணியம்மாள்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தரான அம்மணி அம்மாளின் ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோவிலின் எதிரே அமைந்துள்ளது. இவர் கட்டிய வடக்குக் கோபுரம் ‘அம்மணியம்மாள் கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது. இவருக்கு பூமியில் புதைந்திருக்கும் புதையலை தெரிந்துக் கொள்ளும் வல்லமை உண்டு என்று கூறுகின்றனர்.
ஒருமுறை அம்மணியம்மாள் செல்வந்தர் ஒருவரிடம் நன்கொடை கேட்டு சென்றபோது, அவர் பணத்தை வைத்துக்கொண்டு தன்னிடம் பணமேயில்லை என்று கூறினார். அந்த செல்வந்தரிடம் பணம் இருப்பதை அறிந்துக்கொண்ட அம்மணியம்மாள் சரியானத் தொகையைக் கூறி அதை நன்கொடையாக கேட்டார். இதைக் கண்டு வியந்த செல்வந்தர் அந்த பணத்தை நன்கொடையாக அம்மணியம்மாளிடம் கொடுத்தார் என்ற கதையும் உண்டு.