
ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டலத்திற்கு கடுமையான விரதத்தை பின்பற்றி காடு, மலை தாண்டி ஐயப்பனை தரிசிக்க செல்ல காரணம் ஐயப்பன் சனீஸ்வர பகவானுக்கு செய்துக் கொடுத்த சத்தியம்தான் என்று சொன்னால் நம்புவீர்களா? இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒருமுறை சனீஸ்வர பகவான் ஐயப்ப பக்தர் ஒருவரை பிடிக்க சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய சுவாமி ஐயப்பன், ‘என்னுடைய பக்தக்களை ஏன் தண்டிக்கிறீர்கள்?' என்று சனீஸ்வரரிடம் கேட்டார்.
அதற்கு சனீஸ்வரர் கூறினார், ‘ஏழரை சனியின் காலம் வரும் வேளையில் பாரபட்சம் இல்லாமல் அவர்களை பிடிப்பேன். அதுவே என்னுடைய தர்மமாகும் என்றார். மேலும், மானிடர்கள் செய்யும் கர்மவினைக்கு ஏற்றவாறு அவர்களை தண்டிக்கிறேன்’ என்றார் சனீஸ்வரர்.
அதற்கு சுவாமி ஐயப்பன், ‘இனிமேல் உங்களுடைய தண்டனைகளை என்னிடம் சொல்லுங்கள். அந்த தண்டனைகளை ஒரு மண்டல காலத்தில் அனுபவிக்குமாறு என்னுடைய பக்தர்களுக்கு விரதமுறைகளாக நான் வகுத்து தருகிறேன்’ என்று கூறினார்.
‘நான் தரும் கஷ்டங்களையும், தண்டனைகளையும் ஒரு மண்டல காலத்திற்குள் எவ்வாறு தர முடியும்?’ என்று கேட்டார் சனீஸ்வரர். அதற்கு ஐயப்பன், ‘கவப்படாதீர்கள்! என்னுடைய பக்தர்கள் வெறும் ஒருவேளை உணவை உண்டு திருப்தியடைவார்கள், வெறும் தரையிலேயே படுத்து உறங்குவார்கள், கடுமையான பிரமச்சரிய விரதத்தை மேற்கொண்டு காடு, மலை தாண்டி என்னை வந்து தரிசிப்பார்கள்.
அதோடு உங்களுக்கு பிடித்த கருப்பு நிறத்திலேயே என்னுடைய பக்தர்களை ஆடைகளை அணிய செய்து, காலணி உடுத்திக் கொள்ளாமல், முடித்திருத்தம் செய்துக் கொள்ளாமல், சுகம், துக்கங்களில் கலந்துக் கொள்ளாமல், அனைவராலும் ‘சுவாமி’ என்று அழைக்க செய்வேன். அதிகாலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் எனது பக்தர்களை நீராட செய்வேன்’ என்று கூறினார்.
எனவே, ‘அவர்களின் மீது உங்கள் பார்வையை செலுத்தாமல் மனம் கனிந்து அருள் ஆசி வழங்க வேண்டும்’ என்று கூறினார். இப்படி சனிபகவானின் பார்வையிலிருந்து தனது பக்தர்களை காக்க தண்டனைகளை கடுமையான விரதமுறையாக மாற்றி கொடுத்தார் ஐயப்பன். அத்தகைய விரதமுறைகளை கடைப்பிடித்து சனீஸ்வரரின் ஆசியையும், ஐயப்பனின் அருளையும் பெறுவது நன்மையை தரும்.