நாம் சொல்லும், பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. நல்ல வார்த்தைகளை பேசும் போது பாசிட்டிவ் எனர்ஜியும், தீய வார்த்தைகள் பேசும் போது நெகட்டிவ் எனர்ஜியும் நம்மிடம் வந்துவிடும். எனவே சொல்லும் சொல், பேசும் வார்த்தை எப்போதும் மங்களகரமாகவும், நல்லதாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நன்மை பயக்கக் கூடிய வார்த்தையை பற்றிதான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
சித்தர்கள் மக்களுக்காக அருளிய பல நன்மை பயக்கும் விஷயங்களில் ‘நற்பவி’ என்னும் மூல ஜப மந்திரமும் ஒன்றாகும். இந்த நற்பவி என்ற வார்த்தைக்கு பவிக்கட்டும் அல்லது உண்டாகட்டும் என்று அர்த்தம். நம் மனதில் நினைத்த காரியம் இந்த நற்பவி மந்திரத்தை உச்சரிக்க அப்படியே நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
காகபுஜண்ட மகரிஷியால் எழுதப்பட்டது நற்பவி. அனைத்து தேவாதி தேவர்களுக்கும் முக்கால வழிக்காட்டியாக இருப்பதற்காக காகபுஜண்டரை சிவபெருமான் படைத்தார். அத்தகைய சித்தரால் சொல்லப்பட்டது தான் இந்த நற்பவி. அண்டத்தின் இயக்கத்தை நிர்ணயித்து மும்மூர்த்திகளுடன் தேவாதி தேவர்களின் எதிர்காலத்தையும் அறிந்து உரியவர்களுக்கு உரிய நேரத்தில் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பை சிவபெருமான் காகபுஜண்டருக்கு வழங்கியுள்ளார். காகபுஜண்டரின் முக்கியமான சீடர்களில் கொல்லிமலை கோரக்க சித்தரும் ஒருவர் ஆவர்.
தமிழ் மந்திரங்களுக்கெல்லாம் மூலமந்திரம் என்று சொல்லக்கூடிய நற்பவியை கொடுத்தார். ‘நற்’ என்றால் நல்லது ‘பவி’ என்றால் பலிக்கட்டும் என்று பொருள். ‘நல்லது உண்டாகட்டும்’ என்று பொருள்படுகிறது. இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கும்போது, புருவ மத்தியில் உள்ள ஏழு திரைகளைத் தாண்டி அழியா பேரின்பத்தை தரும் என்று காகபுஜண்ட முனிவரே கூறியிருக்கிறார்.
உலகில் உள்ளவர்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும். உலகில் நன்மை பயக்க வேண்டும். தீமை அழிய வேண்டும் என்றால் இந்த நற்பவி மந்திரத்தை சொன்னாலே போதுமானது. நமக்கு இருக்கும் இக்கட்டான சூழ்நிலையோ அல்லது வேறு ஏதோ பிரச்னையாக இருந்தாலும் ‘நற்பவி’ என்னும் மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது எல்லா பிரச்னைகளும் அகலும்.
இந்த நற்பவி என்ற வார்த்தையை நாம் தினமும் உச்சரித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் யாரையேனும் சந்திக்க போகும்போது ‘வணக்கம்’ என்று சொல்வதற்கு பதில் ‘நற்பவி’ என்று சொல்லலாம். நல்ல எண்ணத்துடன் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது நமக்கு நன்மையே தரும்.
இந்த மந்திரத்தை சொல்பவருக்கும் சரி கேட்பவருக்கும் சரி பாசிட்டிவ் எனர்ஜி உண்டாகும். நற்பவி என்ற மந்திரத்தை உச்சரிக்கும்போது கஷ்டங்ளும், துன்பங்களும் நீங்கி நல்ல சிந்தனை, நல்ல எண்ணம் மனதில் ஏற்படும் என்று அனுபவரீதியாக உணர்ந்தவர்கள் கூறுகிறார்கள். எனவே நீங்களும் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்லியோ, எழுதியோ பார்த்து பயன்பெறுங்கள்.