
சகல ஐஸ்வர்யங்களை தரக்கூடிய மகாலக்ஷ்மியை துதித்து பாடக்கூடிய ஸ்தோத்திரம்தான் கனகதாரா ஸ்தோத்திரம் ஆகும். இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமையன்று மகாலக்ஷ்மியின் படத்திற்கு முன் பாலுடன் கற்கண்டு சேர்த்து நெய்வைத்தியமாக படைத்து சொல்ல வேண்டும்.
தினமும் இந்த மந்திரத்தை 1, 3, 5 என்ற கணக்கில் துதிக்கலாம். இந்த மந்திரத்தை மனமுவந்து நம்பிக்கையுடன் சொல்பவர்களின் கடன் பிரச்னைகள் தீர்ந்து செல்வ செழிப்பை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆதிசங்கரர் சமஸ்கிருதத்தில் கனகதாரா ஸ்தோத்திரத்தை படைத்து நமக்கு வழங்கினார்.
கனகதாரா ஸ்தோத்திரம் எவ்வாறு உருவானது தெரியுமா? ஆதிசங்கரர் தனது இளம் வயதில் ஒருநாள் பிச்சை எடுக்க ஊருக்குள் சென்றார். ஒவ்வொரு வீடாக ஆதிசங்கரர் நின்று பிச்சை கேட்டுக்கொண்டே வந்தார். அப்போது ஒரு பரம ஏழையின் வீட்டிற்கு வருகிறார்.
அங்கேயும் பிச்சை கேட்கிறார் ஆதிசங்கரர். அந்த வீட்டில் உள்ள பெண்மணிக்கு பக்தி அதிகம். அவர்களுக்கு அடுத்த வேளை உணவுக்கே வழியில்லை என்றாலும், தன்னிடம் உணவாக கடைசியாக இருந்த நெல்லிக்கனியை ஆதிசங்கரருக்கு பசியாற்ற கொடுக்கிறார்.
இதைக்கண்ட ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அந்த வீட்டின் வறுமையை போக்கவும், அந்த வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதற்காகவும் அவரை வேண்டி பாடல்கள் பாடினார். ஆதிசங்கரர் பாடல்களை பாடி முடித்ததும், அந்த வீட்டின் கூரையை பிய்த்துக் கொண்டு நெல்லிக்கனிகள் மழையாக பொழிந்தது.
அந்த நெல்லிக்கனிகள் சாதாரண நெல்லிக்கனிகள் இல்லை தங்க நெல்லிக்கனிகளாகும். அப்படி நல்ல உள்ளத்துடன் இருக்கும் பக்தர்களின் இல்லங்களில் வறுமையை போக்கி வளமையையும், செல்வத்தையும் அருளும் மந்திரம் தான் ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் ஆகும்.
ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தினமும் படித்து வரலாம் அல்லது வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மகாலக்ஷ்மியை நினைத்து 108 முறை படித்து வந்தால் மகாலக்ஷ்மியின் பரிபூரண அருளும், ஆசியும், செல்வ வளமும் கிடைக்கும். ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையிலும் அடுத்தவர்களின் பசியாற்ற நினைத்த நல்ல உள்ளங்களுக்காக படைக்கப்பட்ட மந்திரமே கனகதாரா ஸ்தோத்திரமாகும்.