
கடவுளின் மீது எவ்வளவுதான் அதீத பக்தி மற்றும் அன்பு வைத்திருந்தாலும், கடவுள் இருக்கிறார் என்பதை மனதார நம்பவேண்டியது அவசியமாகும். அந்த நொடியே கடவுளை நாம் முழுமையாக உணரமுடியும். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் தீவிரமான சிவபக்தன் ஒருவன் இருந்தான். சிவனை தவிர எந்த கடவுளையும் வேண்டாமல், சிவனை மட்டுமே வேண்டிக்கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு வெகுநாட்களாகவே ஒரு மனக்குறை இருந்தது. அது என்னவென்றால், ‘பல ஆண்டுகளாக சிவபெருமானை வேண்டி வருகிறேன். ஆனால், தனக்கு சிவனின் தரிசனம் கிடைக்கவில்லை என்பதுதான்.
தனது வேண்டுதலை சிவபெருமான் ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை’ என்று கோபம் கொண்டான். இதனால் சைவத்தில் இருந்து வைணவத்திற்கு மாறி மகா விஷ்ணுவை வழிப்படத் தொடங்கினான். வீட்டில் இருந்த சிவபெருமானின் சிலையை அகற்றி அதை பரண் மேல் தூக்கி வைத்துவிட்டு வீட்டில் புதிதாக விஷ்ணு சிலையை வைத்து அதற்கு பூஜை செய்யத்தொடங்கினான்.
ஒருநாள் விஷ்ணு சிலைக்கு சாம்பிராணி, தீபதூபங்களை காட்டினான். அதனால் சாம்பிராணியின் நறுமணம் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றது. இதை கவனித்த அந்த பக்தன் உடனே பரணின் மீது ஏறி அங்கே இருந்த சிவபெருமானின் சிலையின் மூக்கை இறுக்கமாக ஒரு துணியால் கட்டினான். அடுத்த விநாடி சிவபெருமான் அந்த பக்தன் முன்பு தோன்றினார்.
சிவபெருமான் தன் முன் தோன்றியதை பார்த்து வியந்த பக்தன். ‘இத்தனை நாளாக உன்னை வணங்கிய போதெல்லாம் காட்சி தராமல் இப்போது காட்சித் தருவதன் காரணம் என்ன?’ என்று கேட்டான். அதற்கு சிவபெருமான், ‘பக்தனே! இத்தனை நாட்களாக நீ என்னை பூஜித்தாயே தவிர, அதில் நான் இருப்பதாக உணரவில்லை.
அதை வெறும் சிலையாகவே பார்த்தாய். ஆனால், இன்று நீ இந்த சிலையில் நான் இருப்பதாக முழுமையாக நம்பினாய். அந்த நொடியே உன் முன் காட்சியளித்தேன்’ என்று கூறினார். கடவுளை பூஜிப்பது முக்கியமில்லை. அவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்து வழிபடுவதே கடவுளை உணர்வதற்கான சிறந்த வழியாகும்.