தமிழ்க் கடவுளான முருகனுக்கும் தமிழுக்கும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது. முருகப்பெருமானுக்கு தமிழ் மீது அளவுக்கடந்த பிரியம் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியுமா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
செங்கல்வராய பிள்ளை என்று ஒரு தமிழ் அறிஞர் இருந்தார். அவர் தீவிர முருகபக்தர். அவரும் அவருடைய தந்தை சுப்ரமணிய பிள்ளையும் சேர்ந்துதான் திருப்புகழ் ஓலைச்சுவடிகளை தென்னிந்தியா முழுவதும் தேடி அலைந்து திருபுகழை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார்கள்.
1934ல், ஒரு நாள் அவர் திருத்தணி முருகன் சன்னதியில் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி பாடல்களைப்பாடி அர்ப்பணித்துக்கொண்டிருந்தார். அப்போது கந்தர் அந்தாதியில், ‘சேர்ப்பது மாலைய நீலோற் பலகிரித் தெய்வவள்ளி’ என்ற பாடல் மறந்துப் போய்விடுகிறது. எனவே, அந்த பாடலை விட்டுவிட்டு அடுத்த பாடலுக்குச் சென்றுவிடுகிறார்.
அன்றைக்கு இரவு அவருக்கு ஒரு கனவு வருகிறது. அவர் நதியோரமாக நடந்துச் சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிறுவன் வந்து, ‘நல்ல எழுமிச்சைப்பழத்தை மறந்துட்டியே!' என்று சொல்கிறான். இவர் குழப்பமாக, ‘எங்கே மறந்தேன்?’ என்று அந்த சிறுவனிடம் கேட்கிறார். 'கந்தர் அந்தாதியில்' என்று சொல்கிறான்.
செங்கல்வராய பிள்ளைக்கு வந்தது யார் என்பது தெளிவாக புரிந்துவிடுகிறது. முருகனை கட்டியணைக்க முன்னே செல்கிறார். அவர் கனவில் வந்தது முருகப்பெருமான் என்பதை நினைத்து நெகிழ்ந்துப் போகிறார். இந்த நிகழ்வை தன்னுடைய ‘முருகருந்தமிழும்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கந்தர் அந்தாதியில் இப்போது அந்த பாட்டு ‘எழுமிச்சம்பழ பாட்டு’ என்றே சொல்லப்படுகிறது.
முருகனே முதன் முதலில் தமிழ் மொழியை அகத்தியருக்கு அறிவுறுத்தினார் என்பது வரலாறு. முருகனை அதிகமாக வணங்குபவர்கள் தமிழர்கள் என்பதால் இவரை 'தமிழ்க்கடவுள்' என்றும் அழைப்பார்கள். உருவ வழிப்பாட்டில் மிகவும் தொன்மையானது முருகன் வழிப்பாடாகும். முருகனே குறிஞ்சி நிலத்தின் கடவுளாவார். பண்டைய காலத்தில் ‘கௌமாரம்' என்ற தனித்த மதமாக இருந்த முருகன் வழிப்பாடு பிறகு இந்து மதத்துடன் இணைந்தது. ‘முருகு’ என்றால் அழகு, இளமை என்றும் பொருள்படும்.