‘வேதாளம்’ என்றதும் விக்ரமாதித்தன் கதைகள் நினைவுக்கு வரும். ஆனால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வேதாளம் சிவகணங்கள் ஆகும். முருகனுடைய படையிலே இருந்து சூரபத்மனை எதிர்த்து போர் புரிய வந்தவையாகும். எந்த கோவிலிலும் இல்லாத வேதாள வழிப்பாட்டைக் கொண்ட பழமையான முருகன் கோவில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் என்ற இடத்தில் அமைந்துள்ள கந்தசுவாமி கோவிலாகும்.
இக்கோவில் 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலங்களுள் இந்த கோவிலும் ஒன்றாகும். முருகர் கந்தசுவாமியாக வள்ளி, தெய்வாணையுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இக்கோவிலின் தல வரலாறுபடி, முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலன் கோவிலில் பார்வதி தேவியிடமிருந்து வேலை வாங்கிக்கொண்டு திருச்செந்தூரில் அசுரனை சூரசம்ஹாரம் செய்தார். அப்போது முருகப்பெருமானுக்கு துணையாக பூதகணங்கள், வேதாளங்களும் போரிட்டதாக சொல்லப்படுகிறது.
அந்தப் போரில் முருகப்பெருமான் சூரனையும், அவன் மகனான இரண்யேஸ்வரனையும் வதம் செய்ததால் தோஷம் பெற்றார். அதிலிருந்து விடுபட சோமநாத சிவலிங்கத்தை இவ்விடத்தில் நிறுவி வழிப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, சிவபெருமானை அவரது மகனான முருகப்பெருமான் வழிபட்டதால்தான் இவ்விடம் 'சேயூர்' என்றானது. பின்னாளில் பெயர் மருவி இவ்விடம் 'செய்யூர்' என்ற பெயர் பெற்றது. இங்கு 27 நட்சத்திரத்திற்கும் 27 வேதளங்கள் உள்ளன. அவற்றிற்கு ஆலயத்தை சுற்றி தனி சன்னதிகள் அமைந்துள்ளன.
இக்கோவிலுக்கு வந்து உங்களுடைய நட்சத்திரத்திற்கு உரிய வேதாளத்திடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் உடனே நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு வந்து வேதாளங்களை வழிப்படுவதால் திருமண பிரச்னை, கடன் தொல்லை ஆகியவை நீங்கும் என்று நம்பப்படுகிறது.
இக்கோவிலில் வைகாசி விசாகம், சூரசம்ஹாரம், தைபூசம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகள் வெகுவிமர்சியாக கொண்டாடப்படுகிறது. இங்கே ‘சர்வ வாத்தியம்’ என்னும் இசைக்கருவி பண்டிகை காலங்களில் வாசிக்கப்படுவது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. முருக பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக இக்கோவிலுக்கு வந்து ஒருமுறையாவது முருகப்பெருமானையும், அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய வேதாளத்தையும் வழிபட்டு விட்டு செல்வது சிறப்பாகும்.