தமிழகத்தில் தேர்கள் - வரலாறு மற்றும் பரிணாமம் தெரியுமா?

தமிழகத்தில் தேர்கள் - வரலாறு மற்றும் பரிணாமம் தெரியுமா?

சுமார் முப்பது அடி உயரமுள்ள, ராஜ கோபுரத்தை ஒத்த, வண்ணமயமான, பிரமாண்டமான தேரை, நூற்றுக் கணக்கான மக்கள் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் ஊர்வலமாக இழுப்பதை நினைத்துப்பாருங்கள். அந்தப் பிரமாண்ட ஊர்வலத்தைக் காணப்  பெருந்திரளாக மக்கள் கூட்டம் கூடி, எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கு இசை, நடனம் என பல்வேறு உபசாரங்களை வழங்கி, ஊர்வலப் பாதையில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பக்தியும் ததும்ப பக்தர்கள் ஆரவாரம் செய்யும் அந்தக் காட்சியை மனதில் உறைய வைத்துக்கொள்ளுங்கள்.

ஆஹா! எத்தனை அழகான காட்சி அது! இதுபோன்ற கோயில் திருவிழாக்கள்; சடங்குகள் என்பதைக் கடந்து மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு கோலாகலத்திற்கு வழி வகுக்கின்றன. அப்படிபட்ட திருவிழாக்களில் முக்கிய பங்கு வகிக்கும் தேர்களின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் அதன் பரிணாமத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தேர்களின் பரிணாமம்:

தேர்களைப் பற்றிய ஆரம்ப காலக் குறிப்புகள்  ரிக் வேதத்தில் காணப்படுகின்றன. அதில் தேர்கள்  போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன என்ற செய்தி உள்ளது. இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் தேர் பற்றிய குறிப்புகள் உள்ளன. கிபி 629 இல் இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனப் பயணி ஹியூன் சாங், குப்தர் காலத்தில் தேர்ப் பிரிவு உட்பட நான்கு ஆயுதப்படைப் பிரிவுகள் இருந்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். தமிழ் சங்க இலக்கியங்களிலும் தேர்ப்படை தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குப் பிறகு, தேர்கள் பெரும்பாலும் கோயில்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டன. திருவிழா சமயங்களில், கடவுளின் வெண்கல உருவங்கள் இந்தத் தேர்களில் வைத்து, ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகின்றன. தேர்களின் தோற்றம் மற்றும் தேர் திருவிழாக்கள் பற்றிய குறிப்புகளை புராணங்கள் நமக்குத் தருகின்றன. சிருஷ்டியின் கடவுளான பிரம்மா, தாம் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காகவே தேர்த் திருவிழாவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கடவுளுக்கு இணையான அரசன்:

க்களைக் காக்கும் மன்னன் கடவுளுக்கு நிகரானவன். எனவே, மன்னனுக்கு செய்யப்படும் மரியாதைகள் கடவுளுக்கும் உண்டு என்பது வழக்கமாக இருந்தது. அதனால், ஒரு அரண்மனையில் இருப்பது போல பார்வையாளர் கூடம், படுக்கையறை, தோட்டம், தேர் போன்ற வாகனங்கள் அனைத்தும் கோயிலிலும் இடம்பெறத் துவங்கின. அதே போல, ஒரு அரசனுக்கு கொடுக்கபட்ட மரியாதைகள், உபசாரங்கள், பெரிய பவனிகள், தேவதாசிகள், கிரீடம், சிம்மாசனம், கொடி மற்றும் குடை போன்ற பரிவார சேவைகள் அனைத்தும் இறைவனுக்கும் வழங்கப்பட்டது .

சர்வவல்லமை படைத்த  இறைவன் தேரில் பவனி வந்து தனது பக்தர்களுக்கு தரிசனம் தருவது என்பது அவர் இந்தப் பிரபஞ்சத்தை ஒருமுறை சுற்றி வருவதுபோல நம்பப்படுகிறது.

இலக்கியப் படைப்புகளான ‘உலா’வை  கடவுள்களுக்கும் அரசர்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரே விதமான மரியாதைக்கு  ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். உதாரணதிற்கு கவிஞர் காளமேகம் எழுதிய திருவானைக்கவுலா, திருவானைக்கோயில் சிவபெருமானின் அற்புதங்களைப் பற்றி பேசுகிறது. குலோத்துங்க சோழன் உலா, விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் சோழ மன்னர்களைப் புகழ்ந்து கவிஞர் ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டவை.

தமிழகத்தில் தேர்களின் வரலாறு:

நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள் 6 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் 200க்கும் மேற்பட்ட கோயில்களில் பாடியுள்ளனர். அந்தப் பாடல்கள்  வழங்கிய இலக்கியச் சான்றுகளிலிருந்து, தமிழகத்தில், அக்காலத்தில் சுமார் 24 கோயில்களில் திருவிழாக்களும், தேர்களும், ராஜவீதிகளும்  இருந்திருக்கின்றன என்று நாம் அறிகிறோம். இதிலிருந்து காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவர்களும், மதுரையை ஆண்ட  பாண்டியர்களும் தேர்த் திருவிழாவின் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர் என்று நாம் அனுமானிக்க முடிகிறது.

பார்த்தசாரதி கோயிலின் சித்திரத்தேர்
பார்த்தசாரதி கோயிலின் சித்திரத்தேர்

நாயன்மார்களான அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் பாசுரங்கள் சிவாலயங்களில் நடைபெறும் மார்கழி, திருவாதிரை, தைப்பூசம், பங்குனி உத்திரம் விழாக்கள் பற்றி விரிவாகப் பேசுகின்றன. திருவாரூர் சிவபெருமானின் வெண்கல உத்ஸவ மூர்த்திகளைக்கூட அப்பர் தம் பாடல்களில் அழகாக வர்ணனை செய்துள்ளார். நம்மாழ்வார், சென்னை பார்த்தசாரதி கோயிலின் சித்திரத்தேர் (சிற்பங்களுடன் கூடிய மரத்தேர்) பற்றி தனது பாடலில் குறிப்பிடுகிறார். 

1135ஆம் ஆண்டு சோழ மன்னன் விக்ரமன் சிதம்பரம் கோயிலுக்கு தங்கத்தேர் ஒன்றை பரிசாக அளித்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அவரது மெய் கீர்த்தி, அந்தத் தேர் திருவிழாவை ‘பெரும் தேவர் விழா’ என்று குறிப்பிடுகிறது.

பாண்டியர்களில், இரண்டாவது பேரரசைச் சேர்ந்த சுந்தர பாண்டியன்,  ஸ்ரீ ரங்கநாதர் கோயிலுக்கு ஓர் தங்கத்தேரை நன்கொடையாக அளித்ததை கோயிலில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன.

இதையும் படியுங்கள்:
அற்புதம் செய்யும் முட்டைகோஸ் சூப்! 
தமிழகத்தில் தேர்கள் - வரலாறு மற்றும் பரிணாமம் தெரியுமா?

விஜயநகர காலம், கிபி 1422இல் இரண்டாம் கிருஷ்ணதேவராயரிலிருந்து கிபி 1732இல் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வரையிலான மன்னர்கள் தமிழகம் முழுவதும் தேர்  திருவிழாக்களை  செழித்தோங்கி  வளர்த்ததற்கு நம்மிடையே கல்வெட்டுச் சான்றுகள் ஏராளம் உள்ளன. இந்த மன்னர்கள் காலத்தில் விழாக்களும், உத்ஸவ மண்டபங்களும் தெப்போத்ஸவ வைபவங்களும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கின.

தேர்களோடு இணைந்து நடத்தப்படுகிற பல்வேறு உத்ஸவங்கள், ராஜ வீதிகளில் உலா என்பத்தைக் கடந்து தெப்போத்ஸவ வைபவங்கள் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளன. இன்று நாம் கொண்டாடும் விழாக்கள் அனைத்தும் பல்லவர் காலம் துவங்கி, வெவ்வேறு பேரரசுகள் கீழ் மேலும் சிறப்புகள் அடைந்து, நாயக்கர்கள், மராத்தியர்கள், செஞ்சி மன்னர்கள் என அவர்கள் காலத்திலும் தழைத்தோங்கி, இன்றளவும் நாம் கொண்டாடும்படியாக, மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன.

இந்த மரபுகள் பல பல நூற்றாண்டுகள் கடந்தும் மக்களிடையே உயிர்ப்புடன் இருப்பது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com