புஞ்சிரிக்குன்ன குட்டன் அறியுமோ? யார் இவர்?

Guruvayur
Guruvayur
Published on

சில மாதங்களுக்கு முன் நாராயணீயம் பயிலும் நண்பர்கள் ஒரு குழுவாக, சென்னையிலிருந்து குருவாயூர் கோயிலுக்குச் சென்றோம். 

கோயிலினுள் குருவாயூரப்பன் தரிசனம் காண ஆண்-பெண் இரு பாலாருக்கும் ஒரே வரிசைதான். ஆண்கள் வேட்டி உடுத்தியிருக்க வேண்டும், மேலே ஒரு துண்டு மட்டும் போர்த்தியிருக்க வேண்டும். பெண்கள் புடவை அணிந்திருக்க வேண்டும்.

வரிசையில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் தான் மட்டுமே குருவாயூரப்பனை தரிசிக்க வந்திருப்பதுபோல முட்டி மோதிக்கொண்டுதான் நகர்ந்தார்கள். உள் பிராகாரத்தை வரிசையில் வலம் வந்த பிறகு கருவறை வாயிலுக்குள் நுழைந்தோம்.

நுழைந்ததோடு சரி, அங்கேயே நிற்க வேண்டியதாகி விட்டது. ஆமாம், கருவறைக் கதவைச் சாத்தி விட்டார்கள். உள்ளே குருவாயூரப்பனுக்கு பூஜைகள், அலங்காரம் நடந்தன. பக்தர்களின் கூட்டம், நெரிசல் எல்லாம் எப்படி இருந்தாலும், அந்தந்த நேரப்படி குருவாயூரப்பனுக்கு பூஜையும், அலங்காரமும் மிகச் சரியாக நடைபெறுகின்றன. ஆகவே அரைமணி அல்லது ஒருமணிக்கு ஒருமுறை கதவடைத்து, கால்மணி அல்லது அரைமணி நேரம் பூஜை நடந்து முடிந்த பின்புதான் கதவைத் திறக்கிறார்கள். கதவுக்கருகிலேயே இருபுறமும் கோயில் அலுவலர்கள் நின்றுகொண்டு, குருவாயூரப்பனை நேருக்கு நேர் நின்று தரிசிக்கும் நம்மை வேகமாக நகர்ந்து சென்று பிற பக்தர்களுக்கு வழிவிடும்படி விரட்டுகிறார்கள். திருப்பதி ஜர்கண்டிதான்!

பூரணமாக, முழுமையாக குருவாயூரப்பனை தரிசிக்க முடியாத ஏக்கத்தில் வலம் வந்தோம். உட்பிராகாரத்தில் தீர்த்தம், சந்தன பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இந்த பிரசாதம் கிடைத்தது. பத்து ரூபாய் கொடுத்தால் துண்டு வாழையிலையில் கூடுதலாக சந்தனத்தோடு பூக்களையும் வைத்து எறிவதுபோலக் கொடுக்கிறார்கள். பிறருக்கு, கையில் வைத்திருக்கும் சந்தனத்தைக் கிள்ளி, எறிகிறார்கள். (பத்து ரூபாய்க்கு இங்கே மதிப்பு அதிகம். ஆட்டோக்காரர்கள் கூட பத்து ரூபாய்க்கு சவாரி வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!)

Guruvayur
Guruvayur

குரு பகவானும், வாயுவும் இணைந்து உருவாக்கிய கோயில் இது. அதனால்தான் குருவாயூர். ஜனமேஜயன் என்னும் மன்னன் மற்றும் நாராயண பட்டத்திரி இருவரின் தீராத உடல் நோயைத் தீர்த்த பகவான் இங்கே குருவாயூரப்பனாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

மாலையில் மீண்டும் குருவாயூரப்பன் தரிசனம். காலையில் சரியாக தரிசிக்க முடியாத ஏக்கத்தில் இருந்தவர்கள் இப்போது கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு திவ்யமாக அந்தப் பேரழகனை தரிசித்தோம். இடுப்பில் வாழைப்பழம் செருகிக் கொண்டு, வலது கையில் புல்லாங்குழலைத் தாங்கிக்கொண்டு மயக்கும் புன்னகையுடன், எழிலார்ந்த அலங்காரத்துடன் விளங்கிய தோற்றம், என்றும் நெஞ்சை விட்டு அகலாது என்பது உண்மை.

இன்னொரு முறை அன்று நள்ளிரவில் குருவாயூரப்பனை தரிசிக்கலாம் என்று தகவல் கிடைத்ததால் உடனே புறப்பட்டு விட்டோம். அதற்கும் முன்னால் எங்களுக்கு சீவாலி தரிசனம் கிட்டியது. அதாவது யானை மீது குருவாயூரப்பன் உற்சவர் சயனித்தபடி உள்பிராகாரத்தில் வலம் வரும் காட்சி அது. இரவு 8 முதல் 11 மணிவரை நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:
செவ்வாய் தோஷ நிவர்த்தி தரும் பள்ளூர் அரசாலை அம்மன்!
Guruvayur

நள்ளிரவில் இன்னும் ஒருமுறை நிர்மால்யமாக குருவாயூரப்பனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்குளிர, மனம்குளிர, வெகு நேரத்துக்கு தரிசிக்கலாம் என்ற பேராவலுடன் கோவிலுக்குள் சென்றோம். ஆனால் எங்களுக்கும் முன்னால் சுமார் ஆயிரம் பேர் தரிசனத்துக்காகக் காத்திருந்தார்கள்! இரவு 11 மணிக்கெல்லாம் வந்து காத்திருப்பவர்களாம்! இந்த பக்தர்கள் கூட்டத்தில் சிலர் குடும்பமாக வந்திருந்தார்கள். அந்தக் குடும்பங்களில் பாலகர்களும் இருந்தார்கள். அவர்கள் கொஞ்சமும் களைப்படையாமல், கொட்டாவிகூட விடாமல், ‘ஏன் இவ்வளவு லேட்டு? சீக்கிரம் போகலாம்,’ என்று கேட்டு, கொஞ்சமும் சிணுங்காமல், குடும்பத்தாரோடேயே உட்கார்ந்து, நகர்ந்து தரிசனத்துக்காக முன்னேறிக் கொண்டிருந்ததைக் காண பிரமிப்பாக இருந்தது! (குருவாயூரப்பனும் குழந்தை கிருஷ்ணன்தானே! அவன் தன்னை தரிசிக்க வரும் குழந்தைகள் கொஞ்சமாவது துன்பப்பட வைப்பானா என்ன?)

இந்த நிர்மால்ய தரிசனம் என்பது, நள்ளிரவு 2 மணிக்கு, குருவாயூரப்பனுக்கு முந்தைய நாள் கடைசியாக செய்த அலங்காரத்தைக் களைந்து, புதிதாக அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜைகளையும் மேற்கொள்ளும் சம்பிரதாயம்.

Guruvayur Kesavan elephant
Guruvayur Kesavan elephantImg Credit: Wikipedia

கோயில் வளாகத்தில் ஒரு பெரிய யானை சிலை வைத்திருக்கிறார்கள். அதற்குப் பெயர் கேசவன். வருடந்தோறும் உற்சவ நாளன்று குருவாயூரப்பனை சுமந்துகொண்டு ஆலய வலம் வந்த யானை அது. ஏகாதசி நாளில் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் விரதம் காத்த பக்தனாம் அது! தன் 64வது வயதில் (1912 – 1976) இவ்வுலகை நீத்த அதனை கௌரவிக்கும் பொருட்டு நிறுவியிருக்கும் சிலைதான் அது!

எல்லாம் சரி, அது என்ன தலைப்பில் புஞ்சிரிக்குன்ன குட்டன் என்று? 

என்றென்றும் மாறாத புன்னகையுடன் தன் பக்தர்களின் மன, உடல் குறைகளை அகற்றி அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் நிம்மதியாக வாழ வழிகாட்டும் குழந்தை குருவாயூரப்பனைதான், மலையாளத்தில் புஞ்சிரிக்குன்ன குட்டன் என்று அழைக்கிறார்கள்!

குருவாயூரப்பா, நாராயணா, சரணம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com