செவ்வாய் தோஷ நிவர்த்தி தரும் பள்ளூர் அரசாலை அம்மன்!

பள்ளூர் வாராகி அம்மன்
பள்ளூர் வாராகி அம்மன்https://utsav.gov.in
Published on

காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது பள்ளூர் அரசாலை அம்மன் கோயில். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது வாராகியம்மன் அருள்புரியும் இக்கோயில் கருவறையில் மந்திர காளியம்மன்தான் வீற்றிருந்து அருள்பாலித்து வந்திருக்கிறாள். அந்த அம்மனை ஒரு துர்மந்திரவாதி தனது மந்திரத்தால் கட்டிப்போட, அப்போது அருகில் இருந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அன்னை வாராகி அம்மன் மிதந்து வந்து, அந்த மந்திரவாதியை இரண்டாகக் கிழித்து தூக்கி எறிந்து மந்திரகாளியம்மனை விடுவித்ததாகவும் இக்கோயில் வரலாறு கூறுகிறது.

அதையடுத்து, மந்திரகாளியம்மன், வாராகியம்மனை கருவறையில் அமர்த்திவிட்டு, துர்மந்திரவாதியின் உடல் விழுந்த இடத்தின் அருகில் தாம் கோயில் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆலயத்தின் முகப்பில் சங்கு, சக்கரம், அபயம், வரதம் தாங்கிய திருக்கோலத்தில் வாராகி அம்மன் அருள்புரிகிறாள். இரு புறங்களிலும் தேவியின் தோழியர் சாமரம் வீசுகின்றனர். கோபுர வாயிலின் இரு உள்புறச் சுவர்களிலும் பிரத்யங்கரா மற்றும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் போன்றோர் சித்திர வடிவில் அருள்பாலிக்கின்றனர். காசியில் தனிக்கோயில் கொண்ட வாராகியம்மனுக்கு, பள்ளூரிலும் ஒரு ஆலயம் அமைந்துள்ளது. கேட்ட வரம் தரும் இந்த வாராகி தேவி, பள்ளூர் அரசாலை அம்மன் எனும் பெயரில் இங்கு அருள்பாலிக்கிறாள்.

தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி தரும் இந்த புராதனமான வாராகி அம்மன் திருக்கோயில் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் பலன்களை தரக்கூடியவை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

கருவறையில் இரு வாராகி தேவியரை தரிசனம் செய்யலாம். ஒருவர் சிறு வடிவிலான ஆதி வாராஹி (மந்திரகாளியம்மன்), மற்றொருவர் பெரிய வடிவிலான வாராகி அம்மன். இந்த பெரிய வாராகியின் பீடத்தில் ஆறு மாதர்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எருமை வாகனத்தில் பத்மாசனத்தில், தெற்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த அன்னையின் முன்பு ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தியானத்தில் கடவுளிடம் பேச முடியுமா? அறிவியல் ஆய்வு கூறும் உண்மை!
பள்ளூர் வாராகி அம்மன்

ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி தினங்களில் அன்னையின் சன்னிதியில் வாழை இலையில் அரிசியை பரப்பி உடைத்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். செவ்வாய் கிழமைகளிலும் மற்ற நாட்களில் செவ்வாய் ஹோரை நேரத்தில் அன்னையை மாதுளை முத்துக்களால் அர்ச்சிக்க செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கை  கூடுகிறது என்றும், அபிஷேகம் செய்வித்து, சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி பூக்களால் அர்ச்சித்து, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்ய தொழில் வளம் பெருகுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். குடும்பப் பிரச்னைகள் தீர இளநீர் அபிஷேகம் செய்து, செவ்வரளி பூசாத்தி, செவ்வாழை பழங்களை அன்னைக்கு நிவேதிக்கின்றனர்.

இக்கோயிலில் பூஜைக்கு என்று எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தே நிவேதனப் பொருட்களைக் கொண்டு வந்து அன்னைக்கு படைக்கிறார்கள். வாராகியம்மனுக்கான சகஸ்ர நாமங்களில் ஒன்று அரசாலை. அதனால் ஆரம்பத்தில் அரசாலை அம்மன் என்றே இந்த தேவி வணங்கப்பட்டிருக்கிறாள். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் தரிசிக்கவேண்டிய அற்புத திருக்கோயில் அந்த அரசாலையம்மன் ஆலயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com