சிவ பெருமானுக்கு எத்தனை - எத்தனையோ பொருட்களால் அபிஷேகம் செய்தாலும், வருடத்தில் ஐப்பசி பௌர்ணமி நாளில் மட்டும் லிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உயர்ந்த பலனை அளிக்கும். மேலும், ஆண்டு தோறும் நடக்கும் அபிஷேகங்களிலேயே மிகவும் உயர்வான அபிஷேகமாகும்.
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகத்தின் மகிமை: சிவலிங்கம் மீது அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கத்திற்கு சமமாக கருதப்படுகிறது. எனவேதான் சோற்றால் அபிஷேகம் செய்யப்பட்ட லிங்கத்தை தரிசனம் செய்தால், பல ஜென்ம பாவங்கள் நிவர்த்தி ஆகுமெனக் கூறப்படுகிறது.
ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவ பெருமானை அன்னாபிஷேகம் செய்த திருக்கோலத்தை தரிசிக்கும் புண்ணியம், பல பிறவிகளுக்கும் நம்மை தொடர்ந்து வரும். இந்த நாளில் அன்னாபிஷேகத்திற்கு அரிசி, காய்கறிகள் வாங்கிக் கொடுப்பது சிறந்தது.
பெளர்ணமி என்பது அஸ்வினி நட்சத்திரத்தில் வரும். அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய பொருள் அன்னம். அதே போல் சந்திர பகவான் தன்னுடைய சாபம் முழுமையாக நீங்கப் பெற்று முழு ஒளி ஆற்றல்களையும் வெளிவிடக் கூடிய நாள் ஐப்பசி பெளர்ணமி என சொல்லப்படுகிறது. நவகிரகங்களில் ஒருவரான சந்திரனுக்குரிய தானியம் அரிசி ஆகும்.
சிவபெருமானுக்கு, நடத்தப்படும் அபிஷேகங்கள் அனைத்தும் 24 நிமிடங்களில் நிறைவு செய்ய வேண்டும். ஆனால் ஐப்பசி பெளர்ணமி அன்று நடத்தப்படும் அன்னாபிஷேகம் மட்டுமே ஒன்றரை மணி நேரம் சிவ பெருமானின் திருமேனியை அலங்கரிக்கும். சுத்தமான பச்சரிசியால் அன்னம் சமைத்து, நன்கு ஆற வைத்து, பிறகு சிவ லிங்கத்தின் மீது மேலிருந்து கீழாக பரப்பவேண்டும். சிவலிங்கத்தின் உருவைப் பொருத்து அன்னம் தயார் செய்வது அவசியம்.பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்படும்.
கல்லினுள் வாழும் தேரை முதல் கருப்பையில் வளரும் உயிர்வரை அனைத்தையும் படைத்து, அவைகளுக்கு உணவளித்து படியளப்பவராகிய ஈசனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பெளர்ணமியில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் அன்னத்திற்கு குறைவு என்பதே ஏற்படாது. ஒரு அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்வது என்பது கோடி கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த புண்ணிய பலனை அளிக்கும்.
மேலும் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கூறுவது அன்னாபிஷேக தரிசனத்தைக் குறிப்பதாகும்.
உபரி தகவல்:
தில்லை சபாபதிக்கு மாதந்தோறும் வரும் பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மற்றைய கோவில்களில், ஐப்பசி பௌர்ணமியன்று மட்டும் செய்யப்படுகிறது.