
திருமால் திருத்தலங்களுக்கு செல்பவர்களுக்கு முக்கிய பிரசாதமாக தரப்படுவது பெருமாள் தீர்த்தமும், ஸ்ரீ சடாரி சாத்துதலும்தான்
ஸ்ரீ சடாரி என்பது திருமாலின் திருவடி நிலைகளே ஆகும். தீர்த்தம் தெரியும். சடாரி என்பது கிரீடம் போன்ற ஒன்றினை நம் தலை மீது வைத்து எடுப்பார்களே அதுதான். ஸ்ரீ சடாரியைச் சடகோபன் என்பர். அதன் மூலம் நமக்கு பெருமாளின் திருப்பாத ஸ்பரிசம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
நம்மாழ்வாரே திருமாலின் திருவடி நிலைகளாக கருதப்படுகிறார். நாம் பிறக்கும்போது சடம் என்னும் வாயு நம்மை மூடிக்கொள்ளும் அதை விரட்டி தன் மேல் விழாமல் தடுத்து பிறந்தவர் நம்மாழ்வார். அதனால் அவருக்கு சடகோபன் என்ற பெயரும் உண்டு. அவர் சிறந்த திருமால் பக்தராகவும் ஞானாசிரியரனாகவும் விளங்கினார்.
சடாரி என்பது என்ன?
திருவடி அடியார்களை காப்பது திருவடி நிலை. திருவடி நிலையே பாதுகை. பாதுகையே சடாரி சடாரியே நம்மாழ்வார்.
பாதுகை சடாரி ஆழ்வார் எல்லாம் ஒன்றே. வைணவ ஆலயங்களில் எம்பெருமான் திருவடிக்கு முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடி மகுடம் சடாரி எனப்படுகிறது.
அதற்கு அந்த பெயர் எப்படி வந்தது?
ஆழ்வாரும் பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாகப் பட்டிருக்கிறது. பெருமான் உடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி என்னும் நாமத்தை வகிக்கிறது. பாதுகையை நம் தலையில் கோவில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாக பெருமாள் திருவடி சம்மந்தம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்த வகையில் நமக்கு பெருமாள் திருவடியை ஸ்பரிசம் அருளியவர்கள் இருவர். ஒருவர் ஆழ்வார் மற்றது பாதுகை ஆகவே இருவருக்கும் சடாரி என்ற திருநாமம் இருக்கின்றது.