Sri Sivayoginathar Thiruvisanallur
Sri Sivayoginathar Thiruvisanallurhttps://sarayutoayodhya.blogspot.com

சூரிய ஒளி கடிகாரம் அமைந்த அபூர்வ திருக்கோயில் தெரியுமா?

Published on

பொதுவாக, ஆலயங்களில் ஒரே ஒரு தல விருட்சம்தான் இருக்கும். ஒருசில கோயில்களில் இரண்டு மூன்று தல விருட்சங்கள் கூட இருக்கும். ஆனால், கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் சிவயோகநாதர் திருக்கோயிலில் எட்டு தல விருட்சங்கள் உள்ள அதிசயத்தைக் காணலாம்.

வன்னி, உந்த வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, புரசு வில்வம் என இங்கு எட்டு தல விருட்சங்கள் இருக்கின்றன. மேலும், இந்த ஆலயத்திற்குள் நுழையும்போது நந்திதான் முதலில் உள்ளது. அதன் பிறகு கொடிமரம் இருக்கிறது. கருவறையில் இருக்கும் சிவலிங்க திருமேனியின் மேல் பகுதியில் ஈரேழு ஜடைகள் காணப்படுகின்றன.

பிற்காலச் சோழர்களோடு தொடர்புடைய வரலாற்று சிறப்புமிக்க கிராமம் வேம்பத்தூர் என்றும் சோழ மார்த்தாண்ட சதுர்வேதிமங்கலம் என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டது. இந்தக் கோயில் செங்கல் கட்டுமானத்திலிருந்து முழு கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது. கோயில் மற்றும் பரிவார சன்னிதிகள் முதலாம் ராஜேந்திர சோழனால் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இறைவன் பெயர் யோகநாதீஸ்வரர் என்ற சிவயோகநாதர் கிழக்கு நோக்கிய சன்னிதியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி உள்ளார். சித்திரை மாதம் 1, 2, 3ம் தேதிகளில் சூரியக்கதிர் சிவலிங்கத்தின் மேல் படிவது இக்கோயிலின் சிறப்பு அம்சம். படைப்பு கடவுளான பிரம்மன், விஷ்ணுசர்மாவின் மகனாக இவ்வூரில் அவதரித்தார். தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் இணைந்து  சிவனை வேண்டி தவமியற்றினார். தவம் கண்டு மனம் இரங்கி நேரில் தோன்றிய சிவன் இந்த ஏழு யோகிகளை ஏழு ஜோதி வடிவங்களாகி தன்னுள்ளே ஐக்கியப்படுத்திக் கொண்ட நாள் சிவராத்திரி ஆகும். எனவே, இங்கு சிவனுக்கு சிவயோகிநாதர் என்று பெயர்.

இதையும் படியுங்கள்:
கல்யாண விருந்தில் இடம் பெறும் ஒரே கீரை இதுதாங்க!
Sri Sivayoginathar Thiruvisanallur

கோயிலின் தென்புறம், மதில் சுவருக்கு அருகில் அமைந்துள்ள அம்மன் சன்னிதிக்கு எதிரில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. இரண்டாம் பராந்தக சோழன் என அழைக்கப்படும் சுந்தர சோழன் காலத்தில் அமைக்கப்பட்டதாக கருதப்படும் இந்த சுவர் கடிகாரம் சூரிய ஒளி முள்ளின் மீது ஏற்படுத்தும் நிழலின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இயங்க பேட்டரி தேவையில்லை. இக்கடிகாரம் தமிழர்களுக்கு வானியல் துறையில் உள்ள ஆழ்ந்த புலமையையும் துல்லியமாக நேரம் கண்டறியும் திறனும் மேலோங்கி இருந்ததற்கான எடுத்துக்காட்டாகும்.

சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை சூரியனின் இயக்க அடிப்படையில் கணக்கிட்டு இக்கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரானைட் கல்லில் அரலக்கோள வடிவில் டயல் பேட் செதுக்கப்பட்டுள்ளது. நடுவில் மூன்று இன்ச் நீளத்தில் பித்தளையால் செய்யப்பட்ட முள் ஆணி செங்குத்தாக நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் நிழல் எந்த புள்ளியில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சூரிய ஒளி ஆணியில் பட்டு நிழல் விழும் புள்ளியை கண்டு இந்த நேரம் என்று கணக்கிடுவது உண்டாம். கும்பகோணத்தில் இருந்து திருவிசநல்லூர் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com