
வால்மிகி முனிவர் எழுதிய ராமாயணத்தில் வரும் முக்கியமான ஒரு பகுதிதான் சுந்தர காண்டம். சுந்தர காண்டத்தை படிப்பதால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். நவகிரக தோஷம் நீங்கும், தீய சக்திகள் அழியும், உடல்நல பிரச்னைகள் தீரும், மனதில் நினைத்தது நடக்கும், பயம் நீங்கும். இத்தகைய சிறப்புகளை கொண்ட சுந்தர காண்டத்திற்கு அப்பெயர் வந்ததற்கான காரணத்தை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ராமாயணத்தை எழுதி முடித்த வால்மிகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு பெயரை சூட்டினார். அப்போது சுந்தர காண்டத்திற்கு ‘அனுமன்’ என்று பெயர் சூட்டினார். அதற்கு அனுமன் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
வால்மிகி தனது சமயோசிதத்தால் ‘சுந்தர காண்டம்’ என்று பெயர் சூட்டினார். அனுமனும் அருமையாக உள்ளது என்று பாராட்டிவிட்டு இது தனது பெயரில்லை என்று எண்ணிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி தன் தாயான அஞ்சனாதேவியை காணச்சென்றார்.
தன் மகனின் வரவால் மகிழ்ச்சியடைந்த தாய் அஞ்சனாதேவி ‘வா சுந்தரா' என்று அழைத்தாள். இதை கேட்டு அனுமனுக்கு தூக்கி வாரிப்போட்டது. ‘தாயே! தாங்கள் என்னை என்ன பெயர் சொல்லி அழைத்தீர்கள்?’ என்று கேட்டார். ‘மகனே! சிவபெருமான் எனக்கு ஒரு அழகிய மகன் பிறப்பான் என்று அருள்புரிந்தார்.
ஆகவே நீ பிறந்ததும் நான் உனக்கு ‘மாருதி’ என்று பெயர் சூட்டுவதற்கு முன் உன்னை ‘சுந்தரா’ என்றுதான் அழைத்தேன்’ என்று கூறினார். உன்னுடைய பாலிய பருவத்து பெயர் கூட சுந்தரன்தானே மறந்துவிட்டாயா?’ என்று கேட்டார். ‘ நான் பலகாரம் செய்கிறேன்’ என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார். தன் பெயரை தனக்கே தெரியாமல் வால்மிகி முனிவர் வைத்துவிட்டார் என்று அப்போதுதான் அனுமனுக்கு புரிந்தது.
சுந்தர காண்டம் அனுமனின் புகழ், பக்தி, வீரம் ஆகியற்றை விவரிக்கும் காண்டமாகும். சுந்தர காண்டம் படித்தால் தம்பதியினரிடையே அன்யோன்யம் பெருகும். சுந்தரகாண்டம் படித்து வந்தாலோ அல்லது கேட்டாலோ தீராத கஷ்டம் தீரும், எப்படிப்பட்ட துன்பத்தில் சிக்கியிருந்தாலும் அதிலிருந்து மீண்டு வரமுடியும் என்று சொல்லப்படுகிறது.