
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றமும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில் மதுரையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகும். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது இக்கோவிலுக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றத்தில் திருமுருகாற்றுப்படை பிறந்த கதை தெரியுமா? ஒருமுறை சிவபக்தரான நக்கீரர் சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அப்போது அருகில் உள்ள குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருப்பதை கண்டு அதிசயித்தார். இதனால் அவர் செய்து கொண்டிருந்த தவம் கலைந்தது.
அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவ வழிப்பாட்டில் இருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. ஆயிரமாவது நபரை தேடிக் கொண்டிருந்தபோது நக்கீரரும் சிவ வழிப்பாட்டில் இருந்து தவறியதால், அவரையும் பிடித்து சிறையில் அடைத்தது. அப்போது நக்கீரர் முருகப்பெருமானை நினைத்து திருமுருகாற்றுப்படையை பாடினார்.
அவரின் தமிழிலும், பக்தியிலும் மனம் குளிர்ந்த முருகப்பெருமான் தனது வேலை எறிந்து பூதத்தை சம்ஹாரம் செய்தார். நக்கீரர் உட்பட ஆயிரம் பேரையும் விடுவித்தார். நக்கீரர் பூதம் தன்னை தீண்டிய பாவம் நீங்க கங்கையில் நீராட வேண்டும் என்று சொன்னார். அதைக்கேட்ட முருகப்பெருமான் தனது வேலினை ஒரு பாறையின் மீது எறிந்து கங்கை நதியை பொங்கச்செய்தார். அந்த தீர்த்தம்தான் ‘காசி தீர்த்தம்’ என்ற பெயரில் இன்றைக்கும் உள்ளது. இந்த காசி தீர்த்தம் திருபரங்குன்றம் மலை மீது உள்ளது.
திருபரங்குன்றத்தில்தான் முருகருக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்தது என்பதால், இவ்விடம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடத்த மிகவும் ஏற்ற இடமாக கருதப்படுகிறது. இக்கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் சந்தோஷமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு முருகப் பெருமானே அருள்புரிவதாக கருதப்படுகிறது.
இக்கோவில் அதன் கலைநயமிக்க கட்டிடக்கலைக்கும் பெயர் போனதாகும். பாறையை குடைந்து கட்டப் பட்டிருக்கும் இக்கோவில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டாலும், இங்குள்ள மிகப்பெரிய மண்டபங்கள் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.