"கல்லுக்குள் ஈரம் உண்டு "என நம் முன்னோர்கள் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அது உண்மைதான். நாம் பழங்கால கோவில்களுக்கு செல்லும்போது அங்கு பெரும்பாலும் அதாவது 99% நாம் பார்க்கும் சுவாமி சிலைகள் அனைத்தும் கருங்கல்லால் தான் செதுக்கப்பட்டவையாக இருக்கும். இதற்கு என்ன காரணம் என்று நாம் என்றாவது யோசித்து இருக்கிறோமா? சுவாமி சிலைகள் கருங்கல்லால் வடிக்கப்பட்டிருப்பதற்கு சில ரகசியங்கள் உள்ளன.
பொதுவாக கருங்கல் என்பது உடையக்கூடிய தன்மை கொண்ட எரிமலை குழம்புகளில் இருந்து உருவாகும் ஒரு வகை கற்பாறையாகும்.உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகம். குறிப்பாக, கருங்கல் எந்த சக்தியையும் தன்வசப்படுத்திக் கொள்ளும் கொள்ளும் தன்மை உடையது.
அதனால்தான் ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டை செய்து தினமும் முறையாக பூஜை செய்து வருகிறார்கள். இதனால் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவபூர்வமாக உணர முடிகிறது.
இந்த கருங்கல்லானது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து வகையான பஞ்சபூதத்தின் தன்மைகளைக் கொண்டுள்ளது. கருங்கல்லில் தண்ணீர் உள்ளதால்தான் அது குளிர்ச்சியான நிலையிலேயே இருக்கிறது.நிலம் என்பது கல்லுக்குள் இருக்கிறது. அதனால்தான் செடி கொடிகள் வளர்கின்றன.
கருங்கல்லில் நெருப்பும் உண்டு. அதனால்தான் ஒன்றுடன் ஒன்று உரசும்போது தீ பற்றுகிறது. கல்லில் காற்று உள்ளதால்தான் கருங்கல் பாறைகளுக்கு இடையில் தேரைகள் வாழ்கின்றன.
ஆகாயத்தைப் போலவே வெளியில் உள்ள சத்தங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் திறன் கல்லுக்குள் உண்டு.கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட கோவிலில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும்போது, அந்த கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கிறது.
அத்தகைய கோவிலில் நாம் வணங்கும்போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகுவதுடன், நம் வாழ்வில் நல்ல பலன்களும் கிடைக்கிறது.
இந்த காரணத்தினால்தான் கோவில்களில் உள்ள சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுகிறது.