திருப்பதியில் சிவன் கோவில் எப்படி வந்தது என்ற கதை தெரியுமா?

kabilatheertham
kabilatheertham
Published on

திருப்பதி என்றதும் நம் நினைவிற்கு வருவது ஏழுமலையான்தான். ஆனால், திருப்பதியில் சிவனுக்கு என்று பிரபலமான கோவில் இருக்கிறது என்பது எத்தனைப்பேருக்கு தெரியும்? இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ஒருமுறை சாகர் மன்னர் அஸ்வமேதயாகம் நடத்தி இந்த உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எண்ணுகிறார். அதை தடுக்க நினைத்த இந்திரன் மன்னனுடைய பலிக்குதிரையை பாதாள லோகத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்த கபில முனிவரின் அருகில் கட்டி வைத்துவிட்டு போய்விடுகிறார்.

சாகர் மன்னரின் அறுபதாயிரம் மகன்களும் அந்த குதிரையைத்தேடி வருகிறார்கள். முனிவரிடத்தில் குதிரை கட்டியிருப்பதை பார்த்து முனிவர்தான் அந்த குதிரையை திருடிவிட்டார் என்று நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் முனிவரை திட்ட ஆரம்பிக்கிறார்கள். முனிவரின் தியானத்திற்கு இடையூரு ஏற்பட்டதால் கோபம் அடைந்த முனிவர் தன் கண்களை திறந்து மன்னருடைய அறுபதாயிரம் மகன்களையும் எரித்து சாம்பல் ஆக்குகிறார்.

இதனால் தன்னுடைய பாவத்தை போக்குவதற்காக கபில முனிவர் பூமிக்கு வந்து திருமலை அடிவாரத்தில் தவம் செய்து லிங்க வடிவில் காட்சியளித்த சிவபெருமானை தரிசனம் செய்கிறார். அந்த லிங்கம்தான் தற்போது கபிலேஸ்வரர் என்று வழங்கப்படுகிறது. கீழ்த்திருப்பதியிலிருந்து சீனிவாசமங்காபுரம் செல்லும் வழியில் இருப்பதுதான் கபிலத்தீர்த்தம். இந்த கபிலத்தீர்த்தத்தை ஒட்டி கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது.

கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் நன்றாக பராமரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் காமாட்சி, விநாயகர், முருகர், கிருஷ்ணர் ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள கோவில் மற்றும் நீர்வீழ்ச்சி இரண்டுமே மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. கபிலத்தீர்த்தத்தில் மூழ்கி எழும் பக்தர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
முன்னோர்களின் சாபம் தீர்த்து சிவகதி தரும் திருக்கோயில்!
kabilatheertham

மழைக்காலத்தில் இங்குள்ள நீர்வீழ்ச்சியின் அழகைக் காண்பதற்காகவே எண்ணற்ற சுற்றுலாப்பயணிகளும் வருவதுண்டு. 100 அடி உயரத்திலிருந்து வரும் நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் நேரடியாக கோவில் தீர்த்தக்குளத்தில் வந்து சேர்கிறது. இவ்விடம் அதன் அழகிற்கும், முக்கியமான சிவன் கோவில் அமைந்திருப்பதற்கும் பெயர் போனதாகும். பிரம்மோத்ஸவம், அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, விநாயகர் சதூர்த்தி ஆகிய பண்டிகைகள் வெகுவிமர்சியாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com