வேர்க்கடலை Vs மக்கானா: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது தெரியுமா?
தினமும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் வேர்க்கடலை, மக்கானா போன்றவற்றை தேர்வு செய்வது சிறந்தது. இது இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளன. இருப்பினும், வேர்க்கடலை மற்றும் மக்கானா இவை இரண்டில் உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
வேர்க்கடலையை நிறைய பேர் தேர்வு செய்வதற்கான முக்கியக் காரணம், அது விலை மிகவும் குறைவு என்பதால் ஆகும். வேர்க்கடலையில் அதிகமாக கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது. வேர்க்கடலை செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேர்க்கடலையை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். இது பசியைப் போக்குவது மட்டுமல்லால், உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்கிறது. நம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதயம் சம்பந்தமான பிரச்னைகள் வராமல் காக்கிறது.
மக்கானாவில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, புரதம், மெக்னீசியம் ஆகியன உள்ளன. இது உடல் எடையை குறைத்து தசையை அதிகரிக்க உதவுகிறது. மக்கானாவில் குறைந்த கலோரிகள் உள்ளதால், உடல் எடைக்குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. மேலும், இதில் Kaempferol என்னும் Flavonoid உள்ளது. இது அழற்சி எதிர்ப்புத்தன்மையை உடையது.
மேலும், வயது முதிர்ச்சியடைவதையும் தடுக்க உதவுகிறது. சர்க்கரை நோய், இதய பிரச்னை, தூக்கமின்மை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடியளவு மக்கானாவை சாப்பிடுவதால், உடலுக்கு தினமும் தேவைப்படும் மெக்னீசியத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது. மக்கானா சாப்பிடுவது உடலில் உள்ள ஈரப்பதத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
எனவே, வேர்க்கடலையிலும், மக்கானாவிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான ஊட்டச்சத்துக்களே உள்ளன. இரண்டுமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இரண்டையும் சாப்பிடுவதால், வயிறு நிரம்பிய திருப்தி உணர்வைக் கொடுக்கிறது. இதனால், அதிகமாகவோ அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதையோ தவிர்க்கலாம்.
மக்கானாவில் குறைவான கலோரிகளே உள்ளன. இதுவே வேர்க்கடலையில் சற்று அதிகமாக கலோரிகள் உள்ளன. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மக்கானாவை தேர்வு செய்வதே சிறந்தது. அதிகமான ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு இரண்டையுமே கலந்து சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.