
'முருகு' என்றால் அழகு என்று பொருள். 'முருகன்' என்றால் அழகன் என்று பொருள். அத்தகைய அழகுப்பொருந்திய முருகப்பெருமானை கோவிலுக்கு சென்று தரிப்பதே பக்தர்களுக்கு அலாதி இன்பத்தைக் கொடுக்குமெனில், முருகப்பெருமானை நேரிலேயே தரிசிக்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைத்தது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அந்த கதையைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
குதம்பைநாதர் ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கிறார். சிறுவயது முதலே முருகனின் மீது அளவு கடந்த பக்தி வைத்திருக்கிறார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் முருகனுக்கு தொண்டு செய்வதையே பிறவிப்பலனாக எண்ணி வாழ்ந்து வருகிறார். அப்போது ஊரில் இருக்கும் சிலர், ‘நீ தினமும் கடவுளுக்கு திருப்பணி செய்தாலும், அவர் என்ன உனக்கு காட்சித் தரப் போகிறாரா?’ என்று ஏளனமாக கேட்கிறார்கள்.
இதைக்கேட்ட குதம்பைநாதர் மனம் உடைந்துப் போகிறார். கண்களில் நீரோடு முருகன் இருக்கும் கருவறைக்கு சென்று அவர் முன் நின்று வேதனைப்பட்டு அழுகிறார். ‘அப்பனே முருகா! நான் தூய அன்பால் உனக்கு செய்த தொண்டு உண்மையென்றால், நீ எனக்கு காட்சித்தர வேண்டும். அதுவரை நான் இந்த சன்னதியில் இருந்து வெளியே செல்ல மாட்டேன்’ என்று அங்கேயே தியான நிலையில் அமர்ந்து விடுவார்.
இப்படியே நாட்கள் போக குதம்பைநாதரின் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறுகிறது. ஒருநாள் கோவிலின் தூணிலிருந்து கல் ஒன்று விழுந்து அவர் தலையில் ரத்தம் வடிய ஆரம்பிக்கிறது. அப்போதும் தன் மனதை மாற்றிக்கொள்ளாமல் முருகனை நினைத்தப்படியே அமர்ந்து இருக்கிறார் குதம்பைநாதர்.
இப்படியிருக்க ஒருநாள் ஒரு சிறுபாலகனின் குரல் கேட்கிறது. ‘மகனே! எழுந்து வா!’ என்று அந்த சிறுவன் அழைக்க அதற்கு குதம்பைநாதர், ‘என் அப்பன் முருகன் வந்தால் மட்டுமே எழுந்து வருவேன்’ என்று கூறுகிறார். அதற்கு அந்த பாலகன் கூறுகிறான், ‘வந்திருப்பதே உனது அப்பன்தான்!’ என்கிறான்.
தன் மீது தூய அன்பும், பக்தியும் வைத்திருப்பவர்களை எப்போதும் தவிக்க விடமாட்டார் முருகப்பெருமான் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சான்றாக அமைகிறது.