சில பொருட்களை சில நாட்களில் வாங்கும்போது அதனால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். அது போலவே சில பொருட்களை கண்டிப்பாக சில நாட்களில் வாங்கக்கூடாது என்று சொல்வார்கள். அப்படி வாங்கினால், பல்வேறு விதமான பிரச்னைகள் வரும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நவகிரகங்களில் சனீஸ்வர பகவானை நினைத்து மக்கள் அதிகம் பயப்படுவார்கள். ஏனெனில், சனி பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளையும், கஷ்டங்களையும் மக்களால் சமாளிக்க முடியாது என்பதாலேயே இத்தகைய அச்சம் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சக்திக் கொண்ட சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட கிழமைதான் சனிக்கிழமையாகும். இந்தக் கிழமையில் தப்பித்தவறிக்கூட சில பொருட்களை வாங்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படி சனிக்கிழமையில் வாங்கக்கூடாத சில பொருட்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. நாம் சமையலுக்குப் பயன்படுத்தத்கூடிய எண்ணெய்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. அதை மீறி வாங்கினால், வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
2. வீட்டை சுத்தப்படுத்தக்கூடிய மாப், துடைப்பம் போன்ற பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால், நிதி சம்பந்தமான பிரச்னைகள், பொருளாதாரத்தில் பிரச்னைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
3. கல் உப்பை சுக்ர ஓரையில் வெள்ளிக்கிழமை வாங்குவது மிகவும் விசேஷமாகும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால், அதே கல் உப்பை சனிக்கிழமையில் வாங்கினால், வீட்டில் சண்டை, பிரச்னை, வீண் விவாதம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே, கண்டிப்பாக கல் உப்பை சனிக்கிழமையில் வாங்குவதைத் தவிர்த்து விடவும்.
4. கருப்பு எள்ளை கண்டிப்பாக சனிக்கிழமையில் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கினால் வீட்டில் சண்டை வரும், நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் தள்ளிப்போகும், தடைகள் ஏற்படும் என்கிறார்கள்.
5. இரும்பு சம்பந்தமான பொருட்களை சனிக்கிழமையில் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சனிக்கிழமையில் இரும்புப் பொருட்கள் வாங்கினால், நம்முடைய அதிர்ஷ்டம் குறைந்துக்கொண்டே போகும். மேலும், இது நமக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
6. கத்தரிக்கோலை சனிக்கிழமையில் வாங்கினால், உறவுமுறைகளில் பெரும் பிரச்னை, சண்டை ஏற்பட்டு பிரிவதற்கான வாய்ப்புகள் கூட உருவாகும் என்று சொல்லப்படுகிறது. எனவே, கட்டாயம் சனிக்கிழமை இதுபோன்ற பொருட்கள் வாங்குவதை முடிந்த அளவு தவிர்த்து விடுவது நல்லதாகும்.