திருப்பதி பெருமாளின் சங்கு சக்கரம் இருக்கும் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?
திருப்பதி பெருமாளின் சங்கு சக்கரம் இருக்கும் கோவில், பெருமாள் நெற்றிக்கண்ணுடன் காட்சி தரும் கோவில், மருத்துவமனையாக செயலாற்றிய கோவில், 1200 வருடம் பழமையான கோவில் என இத்தனை பெருமைகளையும் கொண்ட கோவிலைப் பற்றித்தான் இந்தப் பதிவில் விரிவாகக் காண உள்ளோம்.
காஞ்சிபுரம் வாலாஜபாத் அருகில் திருமுக்கூடல் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் அப்பன் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்தான் இத்தகைய சிறப்புகளை கொண்ட கோவிலாகும். இவ்விடத்திற்கு 'திருமுக்கூடல்' என்று பெயர் வரக்காரணம் வேகவதி ஆறு, செய்யாறு, பாலாறு ஆகிய மூன்று ஆறுகளும் இங்கே சங்கமிப்பதால், திருமுக்கூடல் என்று ஆனது. இக்கோவிலை தொண்டைமான் சக்ரவர்த்தி கட்டியதாக கூறப்படுகிறது. இக்கோவில் பல்லவ ஆட்சியில் கட்டப்பட்டு, சோழர் ஆட்சியில் மறுசீரமைக்கப்பட்டு, விஜயநகர ஆட்சியில் விரிவாக்கப்படதாக சொல்லப்படுகிறது.
இந்த கோவில் 15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டுள்ளது. அதில் நாடிப்பார்ப்பவர், அறுவை சிகிச்சை செய்பவர், செவிலியர், மருந்துகளின் பெயர், மருந்துகளை பதப்படுத்தும் முறை போன்றவை வீர ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
தொண்டை மண்டல ராஜாவிற்கு இக்கோவிலில் பெருமாள் காட்சியளித்துள்ளார். இக்கோவிலில் மும்மூர்த்திகளின் அடையாளமாக பெருமாள் இருக்கிறார். இக்கோவில் உள்ள பெருமாள் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறார். எல்லா நேரங்களிலும் பெருமாளின் நெற்றிக்கண்ணை காண முடியாது. கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பின் போது காட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. தாமரை மீது நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். தாமரை பிரம்மாவையும், நெற்றிக்கண் சிவனையும் குறிக்கிறது.
புராணக்கதைப்படி ஒருமுறை தொண்டை மண்டல மன்னன் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முற்பட்டபோது, அவருக்கு அசரிரி ஒன்றுக் கேட்டுள்ளது, 'அதில் பக்கத்து நாட்டு அரசன் போர் புரிய வருவதாகவும். இது திருப்பதிக்கு வருவற்கான சரியான நேரம் இல்லை' என்றும் அந்த தெய்வீகக்குரல் கூறியிருக்கிறது. இதனால், தொண்டை மண்டல மன்னன் திருப்பதி பெருமாளை மனமுருகி வேண்ட பெருமாள் தன்னுடைய சங்கு சக்கரத்தை மன்னனுக்கு வழங்கி போரில் வெற்றிப்பெற உதவியுள்ளார். பிறகு ராமானுஜரால் இக்கோவிலில் சங்கு சக்கரம் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. அத்தகைய பெருமைகள் வாய்ந்த இக்கோவிலை ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.