பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித் தீவுகள் அல்லது நதித்திட்டுகள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதியே ஆகும். ரங்கம் என்றால் அரங்கம். அதாவது மண்டபம், சபை என்று பொருள்படும்.
இது 5 வகைப்படும்.
ஆதி ரங்கம்.
மத்திய ரங்கம்
அப்பாலரங்கம்.
சதுர்த்தரங்கம்
பஞ்சரங்கம் ஆகியன ஆகும்.
ஆதி ரங்கம் (கர்நாடகம்)
கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப் பட்டினத்தில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது. இங்குள்ள அரங்க நாத சுவாமி ஆலயமே 'ஆதிரங்கம்' எனப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர் , இங்கு வந்த பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார்.
இவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி முனிவர் வேண்டியதின் பேரில் இறைவன் எழுந்தருளிய தலம் இது.
மத்தியரங்கம்
தமிழ் நாட்டில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஶ்ரீரங்கம் ஆகும். இது 'மத்தியரங்கம் ' என்றும் சிலர் அனந்த ரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம். 21 கோபுரங்களும், சுற்று பிரகாரங்களும் அமையப் பெற்ற சுயம்புத் தலம். பெருமாள் இங்கு புஜங்க சயனத் திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.
அப்பாலரங்கம்
திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் திருப்பேர் நகர் என்ற கோவிலடி அப்பால நாதர் கோயில். இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திர கிரி என்ற அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், இது பஞ்ச அரங்க தலங்களில் 'அப்பாலரங்கம்' என்று போற்றப்படுகிறது. இங்கு பெருமாள் மேற்கு நோக்கி புஜங்க சயனகோலத்தில் அருள்கிறார். இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க் கேண்டய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவக மன்னனுக்கு சாபம் போக்கிய தலம் இது.
பஞ்சரங்கம்
காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது திரு இந்தளூர் திருத்தலம். பஞ்ச அரங்க தலங்களில் 'பஞ்சரங்கம்' அந்தரங்கம் என்று சொல்லப் படுகிறது. இங்கு அருளும் பரிமள ரங்கநாதர் இங்கு ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீர சயன திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.
பரிமள ரங்கநாதர் திருவடிகளில் எம தர்மராஜரும், அம்பரீஷ சக்கரவர்த்தியும் அமர்ந்து இரவும் பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, தன் சாபம் நீங்கப் பெற்றதால் இவ்வூர் 'திரு இந்தளூர் ' என்று பெயர் பெற்றது.
சதுர்த்தரங்கம்
காவிரி நதி, காவிரி, அரசலாறு என இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். இதுவே 'சதுர்த்தரங்கம்' என்று சிறப்பு பெற்றது. இது திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள பெருமாள் சன்னதி தேரின் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரின் இரு புறங்களிலும் உத்தராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் உத்தான சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள் வைதீக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம், சாரங்கம் எனும் வில் ஏந்தி காட்சி தருகிறார். இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். புரட்டாசி சனியில் பெருமாளை தரிசித்து அருள் பெறுவோம்.