
சிவபெருமானை வழிபட எத்தனையோ வழிகள் இருந்தாலும், வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வதன் காரணம் தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப்பதிவில் காண்போம்.
ஒருமுறை வில்வ மரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு வில்வ இலைகளை பறித்துக் கீழே போட்டுக் கொண்டேயிருந்தது. அந்த இலைகள் மரத்தின் மீது அமர்ந்திருந்த சிவபெருமான் மீதும், பார்வதிதேவி மீதும் விழுந்துக்கொண்டேயிருந்தது. இதைக்கண்ட பார்வதிதேவிக்கு குரங்கின் மீது கோபம் ஏற்பட்டது. இதைக்கண்ட சிவபெருமான் பார்வதிதேவியிடம், ‘உமையே! குரங்கின் மீது ஏன் கோபப்பட வேண்டும். அது நம் இருவரையும் வில்வ இலையால் அர்ச்சிக்கிறது’ என்று கூறினார்.
சிவபெருமான் குரங்கிற்கு நல்லுணர்வு உண்டாகுமாறு அருளினார். உடனே மரத்தின் மீதிருந்த குரங்கு கீழே இறங்கி வந்தது. ‘அப்பனே! நான் பிழை செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள்’ என்று வேண்டியது. அதைக்கேட்ட சிவபெருமான் குரங்கிடம், ‘உனது செயல் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதை நாங்கள் பூஜையாக ஏற்றுக்கொண்டோம். நீ எங்களை பூஜித்த பலனாக சோழக்குலத்தில் தோன்றி உலகை ஒரு குடைக்கு கீழே ஆட்சி புரியும் சிறப்பை பெற்று வாழ்வாய்’ என்று வரமளித்தார்.
அடுத்த பிறவியிலும் குரங்கு முகமேயிருக்கும்படி சிவபெருமான் அந்த வரத்தை அளித்தார். அந்த வரத்தின் படி அந்த குரங்கானது கருவூரில் உள்ள சோழ மன்னனுக்கு மகனாக பிறந்தது. அந்த குழந்தை ‘முசுந்தன்’ என பெயர் பெற்று நாட்டின் அரசனானான். ஆகவேதான் சிவனை வில்வ இலையைக் கொண்டு வழிபடுவதற்கான பலன் மிகவும் அதிகம் என்று கூறுகின்றனர்.
வில்வம் சிவனின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. வில்வத்தில் மூன்று இலைகள் சேர்ந்திருப்பது சிவபெருமானின் மூன்று கண்களையும், அவர் ஏந்தும் ஆயுதமான திரிசூலத்தையும் குறிக்கிறது. வில்வ இலை அதிர்வலைகளை உள்வாங்கும் தன்மைக்கொண்டது. வில்வ இலைகளை சிவலிங்கத்தின் மீது வைக்கும்போது லிங்கத்தில் இருந்துவரும் அதிர்வலைகளை தன் வசப்படுத்திக்கொள்ளும்.
இதனால்தான் சிவபூஜை முடிந்து சிவலிங்கத்தின் மீதிருந்து நாம் எடுத்துக்கொள்ளும் வில்வத்தை வைத்துக்கொள்ளும்போது ஆரோக்கியம், மனநிம்மதி, நல்வாழ்வு ஆகியவற்றில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இதனால்தான் வில்வ இலையை ‘சிவமூலிகையின் சிகரம்’ என்றும் ‘மும்மூர்த்திகளின் உறைவிடம்’ என்றும் அழைக்கிறார்கள்.