கேரளாவில் இருக்கும் சிவன் கோவில்களில் மிகவும் பிரபலமான கோவில்தான் திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோவில் ஆகும். இக்கோவில் கேரள கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மகாபாரதக் கதையை சொல்லக்கூடிய சுவர் ஓவியங்களும் இக்கோவிலில் உள்ளது மேலும் இக்கோவிலின் சிறப்பைக் கூட்டுகிறது. இக்கோவிலை தென்னகத்தில் இருக்கும் கைலாசம் என்று அழைப்பார்கள். இத்தகைய சிறப்புமிக்க கோவிலைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக காண்போம்.
புராணங்களின்படி, விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரால் கட்டப்பட்ட முதல் கோவில் இது. உலகப்புகழ் பெற்ற 'திருச்சூர் பூரம்' ஒவ்வொரு வருடமும் இந்த கோவில் முன்புதான் நடத்தப்படுகிறது. இக்கோவில் உலகத்திலேயே 15 ஆவது பெரிய கோவிலாகும்.
இக்கோவில் 4000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று சொல்லப்படுகிறது. அமர்நாத்தில் பனிலிங்கம் இருப்பதுபோல இங்கே நெய் லிங்கம் இருக்கிறது. இந்த நெய் லிங்கம் 12 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்ட மிகப்பழமையான இந்த நெய் லிங்கம் எப்போதும் உருகாமல் பாறைப்போல இறுகியிருக்கிறது.
இக்கோவிலில் இருக்கும் மூலவருக்கு நெய் கொண்டுதான் அபிஷேகம் செய்யப்படுகிறது. கோடை வெப்பமோ அல்லது மூலவருக்கு காட்டப்படும் ஆராதனையிலிருந்து வரும் வெப்பமோ நெய்யை உருகச்செய்வதில்லை. இருப்பினும் நெய் லிங்கத்தை பாதுகாக்க பெரிய கவசம் சாத்தப்பட்டிருக்கிறது.
இங்கு மூலவராக இருக்கும் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கிச் சாப்பிட்டால் தீராத நோய்க்கூட தீரும் என்று சொல்லப்படுகிறது. சிவன் முதன் முதலில் லிங்கத்தின் மூலம் தன் இருப்பை வெளிப்படுத்திய இந்த இடம் 'ஸ்ரீ மூலஸ்தானம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த லிங்கம் ஒரு பெரிய ஆலமரத்தின் அடிவாரத்தில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் இருந்தது. பின்னர் இந்த சிவலிங்கம் உரிய சடங்குகளுடன் நகர்த்தப்பட்டு புதிய இடத்தில் நிறுவப்பட்டது. சாஸ்திரங்களில் வகுக்கப்பட்ட விதிகளின்படி இந்தக் கோவில் கட்டப்பட்டது.
இக்கோவிலில் மகாசிவராத்திரி, ஆனையூட்டு, திருச்சூர் பூரம் ஆகிய பண்டிகைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலக பாரம்பரிய கலங்களில் சேர்ப்பதற்காக இக்கோவில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவின் நினைவு சின்னங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த இக்கோவிலை ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.