குதிரை முகத்தோடு நந்தி தேவர் எங்கே இருக்கிறார் தெரியுமா?

ராமபிரான் பரமேஸ்வரனை வழிபட்ட புண்ணியதலம். அகத்தியரின் சீடர் ரோமச முனிவருக்கு சிவபெருமான் குருவாக காட்சி தந்த திருத்தலம். மிருகண்டு முனிவரின் பாதம் பட்டதும் மார்க்கண்டேயரின் வம்சத்தினர் வழிபட்டதுமான பெருமை மிகு சிவத்தலம் குதிரை முகத்துடன் நந்தி தேவர் அருள் பாலிக்கும் திருத்தலம். என்ன இவ்வளவு சிறப்பு மிக்க தலம் எங்கேஇருக்கிறது என்கிறீர்களா? நெல்லை மாவட்டத்தில் தான் உள்ளது முறப்பநாடு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்.
பொதிகை மலையில் அகத்திய மாமுனிவர் தவம் செய்து வந்த காலம். அவரின் பிரதான சீடரான ரோம சமுனிவர் தம் குருவின் ஆசியுடன் சிவ தரிசனம் பெற்று முக்தியடைய விரும்பினர். இதை அறிந்த அகத்தியர் தாமிரபரணி நதிகளில் உள்ள ஒன்பது சிவாலயங்களை தரிசித்து வருமாறு தம் சீடரை பணித்தார். அத்துடன் அந்த தலங்களை ரோமசர் அடையாளம் காணும் விதம் தாமிரபரணியில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார் அகஸ்தியர். அவை கரை ஒதுங்கிய இடங்களே நவ கைலாய திருத்தலங்கள் எனப்படுகின்றன. அந்த நவகைலாயத்திருத்தலங்களில் ஐந்தாவது தலம் இந்த முறப்பநாடு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்.
இங்கு தாமிரபரணி ஆறு கங்கை போன்று தெற்கு முகமாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பாய்வதால் இதை தட்சிண கங்கைஎன்கிறார்கள். இதில் நீராடி குருவாக காட்சி அளிக்கும் ஸ்ரீ கைலாசநாதர் தரிசித்து வழிபட்டால் கங்கையில் நீராடி வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பர்.
கைலாசநாதர் கோவிலில் சுவாமி கிழக்கு நோக்கி கைலாசநாதர் காட்சி தருகிறார். சுவாமி கருவறைக்கு எதிரே தாமிரத்தககள் வேய்த கொடிமரம் குதிரை முகத்துடன் நந்தி தேவர்.

இவர் குதிரை முகத்துடன் இருக்க காரணம் என்ன தெரியுமா?
சோழ மன்னன் ஒருவனுக்கு குதிரை முகத்துடன் கூடிய பெண் குழந்தை பிறந்ததாம். மனம் வெதும்பிய மன்னன் தன் குழந்தைக்கு மனித முகம் வாய்க்க வேண்டிய சிவபெருமானை தியானித்து தவம் இருந்தான். அவன் முன் தோன்றிய சிவனார் தாமிரபரணியின் மேற்கு கரையில் உள்ள ஆலயத்துக்கு வந்து வழிபடு நினைத்தது நடக்கும் என்று அருளி மறைந்தார். அதன்படி இங்கு வந்த சோழ மன்னன் தாமிரபரணியின் நீராடி கைலாசநாதர் வழிபட்டான். குழந்தையின் குதிரை முகத்தை நீக்கி மனித முகம் தந்த அருளினார் ஈசன். ஆனால் அந்தப் பெண் குழந்தையின் பூர்வ ஜென்ம பாவம் நந்தி தேவரை தாக்க அவரின் திருமுகம் குதிரை முகமாக மாறி போனதாம்.
இங்கு மற்ற தெய்வங்களாக சூரியன் அதிகார நந்தி ஜுரதேவர் சப்த கன்னி நாயன்மார் பஞ்சலிங்கம் கன்னி விநாயகர் வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகரும் சனீஸ்வரரும் இருக்கின்றனர்.
சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர். ஒரு பைரவர் வழக்கம்போல் நாய் வாகனத்துடன் கால பைரவர் மற்றொரு பைரவர் நாய் வாகனம் இல்லாமல் வீர பைரவர் காட்சி தருகிறார்.
இந்தக் கோவிலின் தல விருட்சம் பலா மரம்.
ஸ்ரீ ராமலிங்கம் வந்து வழிபட்ட பிறகு சீதா தேவியை ராவணன் சிறை வைத்திருந்த இடம் தெரிய வந்ததாம். கோவிலுக்கு எதிரே ஆற்றின் மறுகரையில் தசாவதார தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமாலின் தசாவதாரம் காட்சிகளை தரிசிக்கலாம்.
அமைவிடம் ; திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் முறப்பநாடு உள்ளது. ஊரின் வடக்கு பக்கம் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது.