
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பலேரிபட்டு புறநகர்ப் பகுதி. பருத்திப் பேட்டை மற்றும் பலேரிப்பேட்டை இணையும் பகுதி அது. அந்தப் பகுதியில் ஓரிடத்தில் ஆலமரம். அகன்று அடர்ந்த ஆலமரம். அந்த மரத்தடியில் ஒரு காலத்தில் மிகச் சிறிய வடிவிலானைக் கற்சிலையாக எழுந்தருளியிருக்கிறாள் செல்லியம்மன். அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு அவள்தான் காவல் தெய்வம். இஷ்ட தெய்வம். அந்தப் பகுதி மக்களுக்கான கிராம தேவதை.
செல்லியம்மன் வீற்றிருக்கும் ஆலமரத்தின் சுமார் ஐநூறு அடி தூரத்தில் கூவம் ஆறு, அமைதியாகவும் தெளிவாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம். அந்த இடங்களில் கூவம் ஆற்றுத் தண்ணீர் அத்தனைத் தெளிவு. திருவேற்காடு தாண்டி சிங்காரச் சென்னைக்குள் கூவம் ஆறு உலா செல்லும்போதுதான் மாநகரின் அத்தனைக் கழிவுகளையும் முகஞ்சுளிக்காது ஏற்றுக்கொண்டு உருமாறிப் போகிறது. செல்லியம்மனுக்கு வந்துவிடுவோம் நாம்.
அந்த ஆலமரத்தின் கிளைகளும் இலைகளுமே அவளுக்கான இருப்பிடத்தின் மேற்கூரை. அமாவாசை தினங்களில் அங்கே பக்தர்கள் கூடிவிடுகிறார்கள். அதிலும் பெண்கள் அதிகமாக வந்து குழுமுகிறார்கள். “காலங்காலமாக எங்கள் தாத்தா பாட்டி காலத்தில் இருந்து இந்தச் செல்லியம்மன்தாங்க எங்களோட குல தெய்வம். எங்களோடக் கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்கிற எங்களோட இஷ்ட தெய்வம் இவதாங்க” என்கின்றனர் செல்லியம்மன் பக்தைகள்.
சமீபத்திய மாதங்களாக பவன்குமார் என்பவரும் இந்தச் செல்லியம்மனின் தீவிரமான பக்தராக மாறிவிட்டார். “நான் மாறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிக்கு நான் வந்து வந்து போனதில் அந்தச் செல்லியம்மன்தான் என்னை மாற்றிவிட்டாள்” என்கிறார் அவர். பவன்குமார் என்பவர் யார்?
ஆவடிக்கும் அவரது குடும்பத்துக்கும் அத்தனை நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆவடி என்ற அந்த இடம் நகரப் பஞ்சாயத்தில் இருந்து முதன்முதலாக நகராட்சியாக மாறுகிறது. அப்போது 1996ல் பவன்குமாரின் அப்பா சாந்திலால் ஜெயின் என்பவர்தான் ஆவடி நகராட்சியின் முதல் முனிசிபல் சேர்மன். இப்போது அவரது பேரன் அதாவது பவன்குமாரின் மகன் அபிஷேக், ஆவடி மாநகராட்சியின் 13வது வார்டு மாமன்ற உறுப்பினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் பவன்குமார்.
அவர் மேலும் நம்மிடம் பேசினார்.
“சில ஆண்டுகளாக இந்தப் பகுதிக்கு நான் வேறு வேறு பணிகளுக்காக வந்து வந்து போகும்போதெல்லாம், இந்த ஆலமரத்துச் செல்லியம்மனை வணங்கி வழிபட்டு விட்டுத்தான் செல்வேன். இந்தப் பகுதி மக்கள் பலரும் என்னிடம் ‘நாங்க செல்லியம்மன்ட்ட வேண்டிட்டா அவுக எல்லாத்தையும் செஞ்சி குடுத்துடுவாக’ என்று பல முறை சொல்லியுள்ளனர். பின்னர் என்ன அதிசயம் பாருங்கள். இந்த செல்லியம்மனிடம் நான் வந்து வேண்டிக்கொண்டதெல்லாம் அவள் ஒவ்வொன்றாகச் செய்துகொடுத்தாள். காரியங்கள் எனக்கு ஒவ்வொன்றாக நிறைவேறின. அப்போதுதான் என் கனவில் ஒரு நாள் இரவு வந்தாள் எங்கள் செல்லியம்மன்.”
“எனக்கு ஒரே ஆச்சர்யம். ஆலமரத்தடி செல்லியம்மனைத் தரிசிக்க நான் நேரில் செல்லும்போதெல்லாம், அங்கு வரும் பெண்களில் சிலருக்கு அருள் வந்துவிடும். அருள் வந்து ஆடியபடியே அவர்கள் குறி சொல்வார்கள். நான் அதனைப் பலமுறை நேரில் பார்த்துள்ளேன். இன்று இது என்ன? எனது கனவிலே செல்லியம்மனே என் முன்பாகத் தோன்றி அருள் நிறைந்து ஆடுகிறாள்? ‘ரொம்ப வருசமா நா அங்கேதான் இருக்கேன். எனக்கு நீதான் கோயில் கட்டிக் குடுக்கணும்.’ அந்தக் கனவில் எதோ அசரீரி வார்த்தைகளாக அம்மனின் குரல் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது. மறுநாள் காலையில் அந்தப் பகுதி பொதுமக்களிடம் இதனைத் தெரிவித்தேன்.”
“இந்தப் பகுதி பொதுமக்களும் ‘அதனால் என்ன? நம்ம அம்மனுக்குக் கோயில் கட்டிடலாம் சாரே’ என்றனர். அதற்கான திருப்பணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்துள்ளோம். முன்னர் ஒரு அடி உயர செல்லியம்மன் சிலைதான் இருந்தது. இப்போது மூன்றரை அடி உயரத்தில் செல்லியம்மன் கற்சிலையை உருவாக்கி வாங்கிவந்து, அதனை ஆலமரத்தடியில் நிறுவி உள்ளோம்.
மேலும், நாகாத்தம்மன், விநாயகர், முருகன், முனீஸ்வரன், சிவன், பெருமாள் எனத் தனித்தனி சன்னிதிகளில் கோயில்கொண்டு எழுப்பிடவும் திட்டமிட்டுள்ளோம். எண்பத்தைந்து கிலோ எடையளவு கொண்ட செல்லியம்மன் உற்சவர் ஐம்பொன் விக்கிரகம் ஒன்றினை, இந்தப் பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பங்களித்து செய்து தந்துள்ளனர். செல்லியம்மன் தனக்கானக் கோயிலை என்னைக்கொண்டு கட்டிக்கொள்ள என்னைப் பணித்துள்ளாள். அதுவே எனக்குப் பெரும் பேறு” என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் ஆவடி பவன்குமார்.