கடல் நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகர் எங்கிருக்கிறது தெரியுமா?

திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ...
திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ...

துவரை எத்தனையோ வித்தியாசமான விநாயகர் சிலைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். நிறம் மாறும் பிள்ளையார், மனித முகம் கொண்ட பிள்ளையார் என்று அதிசயங்களை பார்த்து தீர்த்தவர்களுக்கு இன்று இன்னொரு அதிசயமான விநாயகரைப் பற்றி சொல்ல போகிறேன். அவர்தான் கடல் நுரையில் செய்யப்பட்ட விநாயகர். இன்றைய பதிவில் இந்த அதிசய விநாயகரை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் .

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவலஞ்சுழியில் இருக்கும் விநாயகர் ஸ்வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருபாற்கடலை கடைய தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். அதனால் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளிவந்து பல அவதிகளுக்கு உள்ளானார்கள். தங்களுடைய தவறை உணர்ந்த தேவர்கள், அந்த நேரத்தில் விநாயகரை ஆவாகணம் செய்ய வேறு ஏதும் இல்லாத நிலையில், அங்கே பொங்கி வந்து கொண்டிருந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின் விநாயகரின் அருளால் எடுத்த காரியம் பூர்த்தியாகி அமுதம் பெற்றார்கள்.

இதையும் படியுங்கள்:
வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கவனிக்க வேண்டியவை!
திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ...

அந்த விநாயகரை பிரதிக்ஷ்டை செய்வதற்கு ஏற்ற இடம் திருவலஞ்சுழியே என்று இந்திரன் இந்த இடத்தில் அச்சிலையை பிரதிக்ஷ்டை செய்து கோவிலும் கட்டினான். அந்த கோவிலில் இன்றும் இந்திரன் வழிப்பட்ட விநாயக மூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு விநாயகர் சதூர்த்தியன்றும் இந்திரன் வந்து இந்த விநாயகரை தரிசித்துவிட்டு செல்வதாக ஐதீகம்.

தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர்தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடைப்பெறுவது போல இவருக்கு அபிஷேகம் கிடையாது. வெறும் 10 அங்குலமே உள்ள இந்த வெள்ளை பிள்ளையாருக்கு புனுகு மட்டுமே சாத்துவார்கள். பச்சை கற்பூரத்தை அரைத்து அதை இந்த விநாயகரின் திருமேனியில் படாமல் மேலே அர்ச்சகர் தூவி விடுவாராம். அதனால் இந்த விநாயகர் தீண்டாத் திருமேனியாவார்.

 கடல் நுரை விநாயகர்...
கடல் நுரை விநாயகர்...

விநாயகரின் துதிக்கை வலப்பக்கம் இருப்பதால் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது என்றும் கூறுகிறார்கள். விநாயகர் சதூர்த்தியன்று இவரை வழிப்பட்டால் வருடம் முழுவதும் வழிப்பட்ட பாக்கியம் கிடைக்குமாம். அப்பர், திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு ராஜராஜ சோழன் வந்து வழிப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் கபஸ்தீஸ்வரராக இருந்தாலும் பிரதான தெய்வம் விநாயகரே ஆவார். இக்கோவிலில் விநாயகர் சதூர்த்தி 10 நாட்கள் திருவிழா போல நடைப்பெறுகிறது. அப்போது அங்கு நடைபெறும் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு வேண்டினால் திருமண பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கையுள்ளது.

மஞ்சளில் பிடித்து வைத்தால் கூட விநாயகர் அருள் தருவார். தேவர்கள் கடல் நுரையில் பிடித்து வைத்த பிள்ளையார் இன்றைக்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருப்பது அதிசயமாகவேயுள்ளது. இத்தகைய அதிசய பிள்ளையாரை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பானதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com