கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

வைரமுடி சேவையோடு செல்வநாராயண பெருமாள்
வைரமுடி சேவையோடு செல்வநாராயண பெருமாள்https://www.youtube.com

பெங்களூரூவில் இருந்து 133 கி.மீ. தொலைவில், மைசூருக்கு 50 கி.மீ. முன்னதாக மாண்டியாவில் அமைந்துள்ளது மேல்கோட்டை செல்வநாராயண ஸ்வாமி திருக்கோயில். ‘யதுகிரி’ என்றழைக்கப்படும் பாறை மலையின் மீது கட்டப்பட்டுள்ள இந்தத் திருநாராயணபுரம் பிரபலமான யாத்திரைத் தலமாகும்.

12ம் நூற்றாண்டில் ஸ்ரீராமானுஜர் 14 ஆண்டுகள் இங்கு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தங்கியதன் காரணமாக மக்களின் கவனத்திற்கு வந்து வைணவத்தின் முக்கியத் தலமாக இது மாறியது என்றாலும்,  அவர் வருவதற்கு முன்பே இந்தக் கோயில் இருந்துள்ளது என்பதால் இது மிகவும் பழைமை வாய்ந்த சரித்திர தலங்களில் ஒன்றாக இருந்துள்ளது.

மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம் திருநாராயணா அல்லது  செலுவநாராயண ஸ்வாமி கோயில் என பக்தர்களால் அறியப்படுகிறது. இந்தக் கோயில் மைசூர் அரச குடும்பமான உடையார்களின் ஆதரவில் உள்ளது. இந்த கோயிலுக்கு அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தாலும், இது கர்நாடகா சுற்றுலாவில் முக்கிய இடமாகவும் அறியப்படுகிறது.

இக்கோயிலின் அழகிய நுண்ணிய வேலைப்பாடுகள் இதன் வரலாற்றுச் சான்றுகளை வெளிப்படுத்துகிறது. யாதவகிரி மலைகளில் கட்டப்பட்டுள்ள இந்த பிரதான கோயில் பெரிய பரிமாணங்களை கொண்ட ஒரு சதுர கட்டடமாக மிகவும் எளிமையானதாக உள்ளது. இங்கு செல்வநாராயண சுவாமியின்  உத்ஸவ மூர்த்தியின் விக்ரகம் தொலைந்து போய் ஸ்ரீ ராமானுஜரால் மீட்கப்பட்டது என்கிறது வரலாறு. மைசூர் மன்னர் ராஜா உடையார் இறைவனுக்கு வழங்கிய மிக மதிப்பு மிக்க நகைகள் இந்த கோயிலில் உள்ளன. உடையார்கள் வைரமுடி அல்லது வஜ்ரமுகுடா மற்றும் கிருஷ்ணராஜமுடி என்று அறியப்படும் இரண்டு தங்க கிரீடங்களை இறைவனுக்கு பரிசாக அளித்தனர். இந்த இரண்டு கிரீடங்களையும் விட பழையதாக ஒரு வேறு ஒரு கிரீடம் உள்ளது. இது யாரோ முகம் தெரியாத நபர்களால் இறைவனுக்கு பரிசளிக்கப்பட்டது என்கின்றனர். இந்த மூன்று கிரீடங்களும் தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளன. மேலும், அவை சிறப்பு நாட்களில் கோயிலுக்குக் கொண்டு வரப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வைரமுடி உத்ஸவம்  மேல்கோட்டில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றாகும். வைரமுடி என்றால் வைரம் பதித்த கிரீடம். இது திருவிழாவின் சிறப்பம்சமாகும். திருவிழாவின்போது, ​​செல்வநாராயணர் இந்த வைர கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டு, 13 நாட்கள் தேரோட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தத் திருவிழாவிற்கு நாடு முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிவது வழக்கம்.

வைரமுடி திருவிழாவானது கிரீடங்களை வெளியே எடுத்து தெய்வங்களின் மீது அலங்கரிக்கும் ஒரு நிகழ்வாகும். ஒரு சுவாரசியமான உண்மை என்னவென்றால், கிரீடங்கள் வெளியே எடுக்கப்படுவதிலிருந்து பெருமாளுக்கு சாத்தும் வரை பிரதான பூசாரி கண்களை கட்டிக்கொண்டே இருப்பார். ஏனெனில் கிரீடத்தை பிரதான கடவுளான திருநாராயணருக்கு அலங்கரிக்கப்படும் வரை யாரும் அதை பார்க்கக்கூடாது என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!
வைரமுடி சேவையோடு செல்வநாராயண பெருமாள்

அழகிய கோபுரத்துடன் ஸ்ரீ ராமானுஜரின் சன்னிதிகள் ஆழ்வார்கள் மற்றும் யதுகிரி அம்மன்  சிலைகள் இங்கு உள்ளன. சிற்பங்கள் மற்றும் தூண்கள் இந்தக் கோயிலின் ஒரு தலைசிறந்த வேலைப்பாடு ஆகும். இது திராவிட கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் முக்கிய படிகளுக்கு அடுத்ததாக அடிவாரத்தில் கட்டப்பட்ட பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் கல்லால் கட்டப்பட்டு, படிக்கட்டுகள் கிணறு வடிவில் உள்ளன. தடுப்பு வடிவ கல் படிகளில் வளைந்த தலையணைகள் போல் உள்ளது சிறப்பு. சுற்றுலா பயணிகள் அவற்றில் சாய்ந்து ஓய்வு எடுக்கலாம்.

கோயிலின் நுழைவாயிலை முக்கோண கோபுரம் அலங்கரிக்கிறது. பிரதான நுழைவாயில் தூண்களால் அலங்கரிக்கப்பட்டு அதன் மேல் மற்றொரு கோபுரம் உள்ளது அருமையான காட்சி.

கோயில் தினமும் காலை 7.30 முதல் இரவு 8 மணி வரையும் மதியம் 1.30 முதல் 3.30 மணி வரையும் திறந்திருக்கும். திருவிழா நாட்களில் வரும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ப கோயில் நேரம் மாறும் வாய்ப்புண்டு. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று இந்த செல்வநாராயண பெருமாளை தரிசித்துவிட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com