காலை நேர டிபனுக்கு முன்பெல்லாம் இட்லி, தோசையை விட்டால் கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பூரி, சப்பாத்தியை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போதோ சப்பாத்தியில் பல வகைகள் உண்ணக் கிடைக்கின்றன. சப்பாத்தி உண்பதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.
மைதா மாவிற்குப் பதிலாக முழு கோதுமை மாவில் தயாரிக்கப்படும் சப்பாத்தியில் டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம். இவை செரிமானம் சிறப்பாக நடைபெறவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உடலுக்குத் தொடர்ந்து சக்தியை அளிக்கவும் உதவுகின்றன.
கோதுமை, ஓட்ஸ், பார்லி மற்றும் சில சிறுதானிய வகைகள் சேர்த்து அரைக்கப்படும் மாவு மல்டி கிரேய்ன் ஃபுளோர் (Multi Grain Flour) எனப்படும். இந்த மாவை உபயோகித்து தயாரிக்கப்படும் மல்டி கிரேய்ன் ரொட்டி புரோட்டீன், நார்ச்சத்து, வெவ்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சேர்ந்த ஒரு சரிவிகித உணவாக உருவெடுக்கும். இதில் ஊட்டச் சத்துக்களும் அதிகம் இருக்கும்.
பேர்ல் மில்லட் (Pearl Millet) எனப்படும் சிறு தானியம் கம்பு. இதன் மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் சப்பாத்தியில் அதிகளவு நார்ச்சத்து, இரும்புச் சத்து, மக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சீரான செரிமானத்துக்கும், இதய ஆரோக்கியம் காக்கவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகின்றன.
ஜோவர் (Jowar) எனப்படும் சோளம் ஒரு க்ளுட்டன் ஃபிரீ தானியமாகும். சோள ரொட்டியில் அதிகளவு நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை செரிமானம் சிறப்பாக நடைபெறவும், எடையை சம நிலையில் வைத்துப் பராமரிக்கவும், உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன.
க்ளுட்டன் சென்ஸிட்டிவிட்டி உள்ளவர்கள் உண்ண ஏற்றது ராகி ரொட்டி. இதில் அதிகளவு கால்சியம், இரும்புச் சத்து மற்றும் டயட்டரி நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியம் காக்கவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகின்றன.
கடலை மாவில் தயாரிக்கப்படும் பேசன் (Besan) ரொட்டியில் அதிகளவு புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் சிங்க், இரும்புச் சத்து ஆகிய கனிமச் சத்துக்களும் அடங்கியுள்ளன. பேசன் ரொட்டி தசைகளின் சீரமைப்பிற்கும், எடையை சம நிலையில் வைத்துப் பராமரிக்கவும், உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும்.
இவ்விதமான ரொட்டி வகைகளை அதற்கேற்ற சைட் டிஷ்களுடன் மாற்றி மாற்றி உட்கொண்டு பலவித ஊட்டச் சத்துக்கள் பெறுவோம்; ஆரோக்கியம் காப்போம்.