சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும் திருத்தலம்... ஆச்சரியமூட்டும் அதிசய தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி தாலுகாவில் கழுகு மலை அமைந்துள்ளது. இங்கு கழுகாசல மூர்த்தி என்னும் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இது ஒரு குடைவரை கோவில். கழுகுமலை முருகன் கோவிலில் கழுகாசல மூர்த்தி மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அவரது இருபுறமும் வள்ளி மற்றும் தெய்வானை சன்னதிகள் அமைந்துள்ளன. வள்ளி தெற்கு பார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் முருகன் அமர்ந்த நிலையில் 4 அடி உயரத்தில் பெரிய திருமேனியுடன் காட்சி தருகிறார்.
தல சிறப்பு:
இந்திரனே மயிலாக:
மற்ற கோவில்களில் அசுரன் தான் மயிலாக இருப்பான். எனவே, மயிலின் முகம் முருகனுக்கு வலது புறமாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது. எனவே, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும்.
குரு மங்கள ஸ்தலம்:
இத்தலத்தில் குருவும் (தக்ஷிணாமூர்த்தி), முருகனும் (செவ்வாய்) இருப்பது சிறப்பான அம்சம். எனவே 'குரு மங்கள ஸ்தலம்' என அழைக்கப்படுகிறது. கழுகாசல மூர்த்தியை அகஸ்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம். இங்கு முருகனுக்கு என்று தனிப் பள்ளியறையும், சிவபெருமானுக்கு என்று தனி பள்ளியறையும் அமைந்திருப்பது தனி சிறப்பாகும்.
மலையே கோபுரமாக:
கந்தபுராணத்தின் ஆசிரியர் கச்சியப்பர், குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் 3 என்றும், அதில் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை என்றும் குறிப்பிட்டுள்ளார். இக்கோவிலின் சிறப்பம்சம் மலையைக் குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பது தான். இந்த குடைவரைக் கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி வர வேண்டும் என்றால் மலையையே சுற்றிவர வேண்டும்.
கழுகாசல மூர்த்திக்கு முகம் ஒன்று, கரங்கள் ஆறு, இடது காலை மயிலின் கழுத்திலும், வலது காலை தொங்க விட்டும், கையில் கதிர்வேலுடன் காட்சி தரும் அழகே தனி தான்.
தல வரலாறு:
ராமாயண கால தொடர்புடையது. இராவணனால் ஜடாயு கொல்லப்பட, ராமன் இறுதிக் காரியங்களை செய்ய, இதை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு முனிவர் ராமனிடம் தன்னுடைய சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய முடியாமல் போனதை எண்ணி வருந்தி, பாவம் தீருவதற்கு வழி கேட்டார்.
ராமரோ கஜமுக பர்வதத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வர இதற்கான விடை கிடைக்கும் என்றார். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் முனிவர் கஜமுகப் பருவத்திலேயே தங்கி இருக்க, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியே வந்தார்.
சூரபத்மனின் தம்பி தாரகாசுரன் முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்ததை அறிந்த முருகன் தாரகாசுரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர கஜமுகப் பர்வத்தில் ஓய்வெடுக்க அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி. அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார். கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுகப் பர்வதமே அவருடைய பெயரால் 'கழுகுமலை' எனப் பெயர் பெற்றது.
திருவிழாக்கள்:
கந்த சஷ்டி 13 நாட்களும், வைகாசி விசாகத்தன்று 10 நாள் திருவிழாவாகவும், தைப்பூசத்தில் 10 நாட்களும், பங்குனி உத்திரம் 13 நாட்களும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

