கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார்? அது கிருஷ்ணரின் கைவிட்டுப் போனதற்கு காரணம் யார்?

Lord Krishna with his flute
Lord Krishna with his flute
Published on

பிருந்தாவனத்தில் வளர்ந்து வந்த கிருஷ்ணரை அனைவருக்கும் பிடித்திருந்தது. அவருடைய குறும்புகள் அனைத்தும் மனம் கவர்ந்தவையாகவே இருந்தன. பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். இவரைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் வருகை புரிந்தார்கள் என்பதில் சற்றும் ஆச்சரியம் இல்லை.

அதேபோல் தான் பிருந்தாவனத்தில் வளர்ந்து வந்த கிருஷ்ணரை காணும் ஆசை சிவபெருமானுக்கும் ஏற்பட்டது. தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஈசன் ஒரு சிறுவன் உருவம் எடுத்து பிருந்தாவனம் சென்றார்.

சிறுவனாக இருந்த ஈசன் கண்ணனுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தார். விளையாடி முடித்த சிவபெருமான் மிகவும் மனம் மகிழ்ந்து பால கிருஷ்ணருக்கு ஒரு பரிசு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அந்த ஒரு பரிசு தான் பன்சூரி என்று அழைக்கப்படும் கிருஷ்ணரின் புல்லாங்குழல்.

கண்ணன் புல்லாங்குழலை தனது சிறு வயதில் இருந்தே வாசிக்கத் தொடங்கினார். இவருடைய வாசிப்பைக் கேட்டு ஒட்டுமொத்த பிருந்தாவனமும் அந்த இசையில் மயங்கிப் போனது. கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்டதும் எப்பொழுதும் ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் யமுனை நதி கூட தனது நீரோட்டப்பாதையை மாற்றி கண்ணன் இருக்கும் திசை நோக்கி பாயுமாம்.

அனைவருக்கும் புல்லாங்குழல் இசை பிடித்திருந்தாலும், கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்ததற்கான காரணம் தன்னை விட 5 வயது பெரியவளான ராதைக்காகத்தான்.

கிருஷ்ணன் ராதையையும், புல்லாங்குழலையும் மட்டுமே மிகவும் நேசித்தார். ஆனால், ராதைக்கு ஒரு முனிவரின் மூலம் ஒரு சாபம் கிடைத்தது. "கிருஷ்ணரை நீ இன்னொரு முறை சந்தித்தால், அடுத்த 100 ஆண்டுகளுக்கு கிருஷ்ணரை பிரிந்து தான் இருக்க வேண்டும்," என்ற சாபத்தை வழங்கினார். இதனால் மிகவும் மனமுடைந்த ராதை, 'என்ன தான் முயற்சி செய்தாலும் கிருஷ்ணரை பார்க்காமல் இருக்க முடியவில்லை' என்று அவரைப் பார்க்கச் சென்று விடுகிறாள்.

ராதை கிருஷ்ணரை பார்த்த அடுத்த கணமே முனிவரின் சாபம் பலிக்க தொடங்கிவிட்டது. அதாவது அப்பொழுது தான் கிருஷ்ணர் ராதையை முதல் முறையாக பிரிந்து மதுராவிற்கு செல்கிறார். விதியின் சூழ்ச்சியால் கிருஷ்ணர் மீண்டும் பிருந்தாவனத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். இவ்வாறே நூறு வருடங்களும் கடந்து விடுகின்றன.

அதன் பிறகு வயதான நிலையில் ராதை கிருஷ்ணரை காண செல்கின்றாள். அப்பொழுது ராதையை பார்த்த கிருஷ்ணர் "நீ என்னை ஒரு முறை பிரிந்ததே போதும்" என்று கூற, ராதை உடனே அழத் தொடங்கி விடுகிறாள். அதன் பிறகு ராதை கிருஷ்ணரிடம் எனக்காக ஒருமுறை உங்களது புல்லாங்குழலை வாசியுங்கள் என்று கேட்கிறாள்.

கிருஷ்ணரும் ராதையை நினைத்து புல்லாங்குழலை வாசித்தார். புல்லாங்குழல் வாசிப்பதை முடித்துவிட்டு கண்ணன் அவரது கண்களை திறந்து பார்க்கும் பொழுது, ராதை இறந்து கிடப்பதை பார்த்து தானும் ஒரு கடவுள் என்பதை மறந்து கதறி அழத் தொடங்குகிறார்.

இறுதியாக ராதையே என்னை விட்டு சென்று விட்டாள், ராதைக்காக நான் வாசிக்க தொடங்கிய இந்த புல்லாங்குழல் எதற்கு என்று உடைத்து தூக்கி எறிந்து விடுகிறார்.

மிகவும் பிடித்த விஷயங்கள் எல்லாம் கைவிட்டுப் போகும் என்பது மனிதருக்கு மட்டுமல்ல, அந்த கிருஷ்ணனுக்கே நிகழ்ந்திருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதையும் படியுங்கள்:
எலான் மஸ்க் பரிந்துரைக்கும் Pomodoro Technique - சாதிக்க சிறந்த வழி தோழர்களே!
Lord Krishna with his flute

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com