நெய் எல்லோர் வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். இருப்பினும், நம் அன்றாட வாழ்வில் உண்ணக்கூடிய நெய் பசு நெய்யா அல்லது எருமை நெய்யா என்பதை யோசித்ததுண்டா? எந்த நெய்யை எடுத்துக்கொள்வது அதிக ஆரோக்கியத்தைத் தரும்? அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பாலில் இருக்கும் கொழுப்பிலிருந்து கடைந்து எடுக்கப்படும் வெண்ணெய்யை உருக்கும்பொழுது நெய் கிடைக்கிறது. உணவில் நெய்யை சேர்த்துக்கொள்வதால், நிறைய ஆரோக்கிய நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது. உணவு செரிமானத்திற்கு, ஊட்டச்சத்து கிடைப்பதற்கு, எலும்பு ஆரோக்கியத்திற்கு நெய் மிகவும் அவசியமானதாகும்.
பசு நெய்யில் வைட்டமின் ஏ, கே, டி மற்றும் கால்சியம் இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பசு நெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்குக் காரணம் பாலில் இருக்கும் carotene ஆகும். இது செரிமானத்திற்குப் பிறகு வைட்டமின் ஏவாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
எருமை நெய்யில் மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளன. எருமை நெய் வெள்ளை நிறத்திலே இருக்கும். இதற்குக் காரணம் இதில் அதிகமான கொழுப்பும், கலோரிகளும் இருப்பதனால் ஆகும். இதனால் எருமை நெய்யை அதிக நாள் வைத்துப் பயன்படுத்தலாம். உணவில் அதிகமாக கொழுப்பு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள் பசு நெய்யை சாப்பிடுவது சிறந்தது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பசு நெய்யை எடுத்துக்கொள்வது சிறந்தது. உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் எருமை நெய்யை எடுத்துக்கொள்ளலாம்.
உணவில் பசு நெய்யை இனிப்பு போன்றவை செய்யப் பயன்படுத்துகிறார்கள். எருமை நெய்யை பன்னீர், Yogurt போன்றவை செய்யப் பயன்படுத்துகிறார்கள். பசு நெய் கல்லீரல் நோய், கீல்வாதம், நோய்தொற்று போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. மேலும் பசுநெய்யில் Mono unsaturated omega3 இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எருமை நெய்யில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெடித்த உதடுகள் மற்றும் கண் கருவளையத்திற்கு எருமை நெய்யை பயன்படுத்தலாம். இதில் உள்ள வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
எனவே, பசு நெய் மற்றும் எருமை நெய் இரண்டிலுமே நிறைய நன்மைகள் இருந்தாலும் பசு நெய் எடுத்துக்கொள்வதே சிறந்தது. ஏனெனில், இதில் கொழுப்பு அதிகமாக இல்லாததால், உடலில் கொழுப்பை சேர விடாமல் கட்டுப்படுத்த உதவுகிறது.