பெருமாளுக்கு உகந்த நவதிருப்பதிகளில் முதல் தலமாக மட்டுமின்றி, நவக்கிரகங்களில் சூரியனுக்குரியதாகவும் விளங்குகிறது திருவைகுண்டம். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள திருவைகுண்டம் எனும் இத்தலத்திற்கு செல்ல திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.
புராண காலத்தில் அசுரன் சோமுகன் பிரம்மாவிடம் இருந்து வேதங்களைத் திருடிச் சென்றுவிடுகிறான். பிரம்ம தேவன், மகாவிஷ்ணுவிடம் உதவி வேண்டி தாமிரபரணிக்கரையில் உள்ள கலச தீர்த்தத்தில் நீராடி, நாராயணனை நோக்கித் தவம்புரிகிறார். நாராயணனும் வேதங்களை மீட்டு அவர் வேண்டுகோளை நிறைவேற்றும் பொருட்டு வைகுண்டநாதராய் இத்தலத்தில் எழுந்தருளினார். வைகுண்டத்தில் காட்சி தரும் திருக்கோலமே இங்கும் என்பதால் திருவைகுண்டம் என இத்தலம் அழைக்கப்படுகிறது என்பது இக்கோயிலின் தல புராணம்.
ஸ்ரீவைகுண்டம் நகரில் வாழ்ந்து வந்த காலதூஷகன் என்ற திருடன், தினமும் பெருமாளை பக்தியுடன் வழிபட்ட பின்னர் தான் தனது தொழிலுக்கு செல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான்.
ஒரு சமயம் அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான். காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட, திருடனென்றாலும் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்ட தனது பக்தனுக்காக பெருமாள் அவன் உருவில் அரசவைக்குச் சென்றார். அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறியதை உணர்த்தி, அதனால் திருடனாக பக்தனுக்கும், அரசனுக்கும் காட்சி தந்து அருளினார். திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார் என்ற மரபுவழிச் செய்தியும் உண்டு.
ஒன்பது நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டு கம்பீரமாக நிற்கிறது இக்கோயிலின் ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கருவறையில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
உத்ஸவரான கள்ளபிரான் பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார். இங்கு நரசிம்மர், கோதண்டர் ஆகியோருக்கு தனி சன்னிதிகள் உள்ளன. தல விருட்சமாக பவளமல்லி மணம் வீசுவது ஆனந்தம். மேலும் பிருகு தீர்த்தம் , தாமிரபரணி தீர்த்தம் , கலச தீர்த்தம் என பிரசித்தி பெற்ற தீர்த்தங்களும் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா, இந்திரன், காலதூஷகன் போன்றவர்கள் பெருமானை பிரார்த்தனை செய்து நற்பேற்றினை பெற்றுள்ளனர் என்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மைகளும் கைகூடும். வறுமை, பாவம் போன்றவை நீங்கி சிறந்த நல்வாழ்க்கை பெறுவார்கள் என்பது ஐதீகம்.
இத்தல பெருமாளை நம்மாழ்வார் போற்றிப் பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. பிரம்மனால் நடத்தப்பெற்ற சித்திரை உத்ஸவப் பெருவிழாவுடன் ஏனைய விழாக்களும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.