குண்டுக் கண்களுடன், புஸுபுஸு வாலுடன் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடித் திரியும் அணில் ஒரு அழகான ஜீவ ராசி.
அதனுடைய கழுத்தில் இருந்து வால் வரை மூன்று அழகான மென்மையான கோடுகள் இருக்கின்றன. பார்ப்பதற்கு மிக அழகான தோற்றத்தை கொடுக்கின்றன. அணிலின் முதுகில் இந்த மூன்று கோடுகளை போட்டது யார் என்பதற்கான ஒரு ஆன்மிக கதை உண்டு.
இராமாயண காலத்தில் தன் சிற்றன்னையின் கட்டளைக்கு ஏற்ப தன் பத்தினி சீதாதேவி மற்றும் அன்புத்தம்பி லட்சுமணனுடன் ராமர் காட்டில் வனவாசம் செய்ய ஆரம்பித்தார். சீதையின் அழகை தங்கை சூர்ப்பனகையின் மூலம் கேள்விப்பட்ட ராவணன் மாறுவேடத்தில் வந்து சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான்.
அனுமன் இலங்கைக்குச் சென்று சீதாதேவி அங்கு சிறை வைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து மோதிரத்துடன் திரும்பி வந்து அந்த தகவலை ஸ்ரீராமரிடம் சொல்கிறார்.
உடனடியாக இலங்கைக்குச் செல்வதற்காக கடலின் மேல் பாலம் அமைக்கும் திட்டம் உருவானது. பாலம் கட்ட தேவையான பணிகளை சுக்ரீவனின் வானரப் படைகளும் ஆஞ்சநேயரும் ஒன்றிணைந்து செய்ய ஆரம்பித்தார்கள். அந்த வேலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு அணில் தானும் ஸ்ரீராமருக்கு இந்த புண்ணிய காரியத்தில் உதவ வேண்டும் என்று நினைத்தது.
ஆனால் மிகச் சிறிய உருவம் கொண்ட தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தது. வானரப் படைகளுக்குரிய உடல் பலமும் திறமையோ தனக்கு சிறிதும் இல்லை என்பது அதற்கு தெரியும். மலைகளில் இருந்து பெரிய பாறைகளை உருட்டி எடுத்துக் கொண்டு வந்து வானரப் படைகள் சேர்த்தன. குரங்குகள் மிக தீவிரமாக பாலத்தை உருவாக்குவதில் பங்கேற்றன.
சிறிது நேரம் சிந்தித்த அணிலுக்கு ஒரு யோசனை புலப்பட்டது. பின்னர் கடற்கரைக்குச் சென்று தன் உடலை நீரில் நனைத்துக் கொண்டதது. பின்பு கடற்கரை மணலில் புரண்டு தன் மீது மணலை ஒட்ட வைத்துக் கொண்டது. பாலம் கட்டும் இடத்திற்கு வந்து, பெரிய பாறைகளுக்கு இடையே உள்ள துளைகளை அடைக்கும் வண்ணம் தன் உடலில் இருந்த மணல் துகள்களை உதிர்த்தது.
பின்பு தன் வாயில் கூழாங்கற்களை சுமந்து கொண்டு வந்து, பெரிய பாறைகளுக்கு இடையே உள்ள வெற்றிடங்களில் போட்டு நிரப்பியது. இதைக் கண்டு வானரங்கள் கேலியும் கிண்டலும் செய்தன. ‘’நாங்கள் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டிருக்கிறோம். பெரிய பெரிய பாறைகளை சுமந்து கொண்டு வந்து நாங்கள் போடுகிறோம். நீயோ மண்ணையும் கூழாங்கற்களையும் கொண்டு வந்து போடுகிறாயே? இதனால் ஒரு துளியும் பிரயோசனம் இல்லை தெரியுமா?’’ என்று எள்ளி நகையாடின.
அணிலின் அர்ப்பணிப்பு உணர்வைக் கண்டு சுக்ரீவன் ஆச்சரியப்பட்டார். உடனே ஸ்ரீராமரிடம் சென்று அணிலின் பணியை பற்றிக் கூறினார். ராமர் வெளியே வந்து அந்த அணிலை எடுத்து தன் கைகளில் வைத்துப் பார்த்தார். மிகச்சிறிய உருவம் கொண்ட இந்த சிறிய ஜீவன் தன்னால் முடிந்த பங்களிப்பை செய்கிறது என்று எண்ணி அவரது மனம் நெகிழ்ந்தது. அன்போடு அதன் முதுகில் தடவிக் கொடுத்தார். அவரது விரல்கள் அணிலின் முதுகில் பட்டதும் மூன்று அழகிய கோடுகள் உருவாகின.
தன்னலமற்ற பக்தியின் வெளிப்பாடாக செய்த தொண்டு காரணமாக ஸ்ரீ ராமரின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தது அணில். அதற்கு பரிசாகத்தான் முதுகில் அழகிய கோடுகளை பெற்றது என்று புராணத்தில் சொல்லப்படுகிறது.