நிக்கல் ஒவ்வாமை என்பது ஒரு பொதுவான சரும எதிர்வினையாகும். நகைகள் கைக்கடிகாரங்கள் மற்றும் பிற அன்றாட பொருட்களில் காணப்படும் நிக்கல் என்ற உலோகத்தை அணியும்போது ஏற்படுவது. இவற்றை அணியும்போது சருமத்தில் சொறி, அரிப்பு, சிவத்தல், சில சமயங்களில் கொப்புளங்கள் ஏற்படலாம். இவை ஒவ்வாமை தொடர்பு சரும அழற்சி என்று அழைக்கப்படுகின்றன.
நிக்கல் ஒவ்வாமை ஏற்பட என்ன காரணம்?
உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நிக்கலை தீங்கு விளைவிக்கும் பொருளாக தவறாக அடையாளம் காணும்போது நிக்கல் ஒவ்வாமை ஏற்படுகிறது. சென்ஸிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு நிக்கலின் வெளிப்பாடு ஒரு எதிர்வினையை தூண்டுகிறது.
நிக்கல் அடங்கிய பொருட்கள்: அணிகலன்களில் கவரிங் நகைகள், சேஃப்ட்டி பின்கள், கைக்கடிகாரம், மோதிரங்கள் நெக்லஸ்கள் மற்றும் வளையல்கள் போன்றவற்றில் நிக்கல் கலந்திருக்கும். ஆடைகளில் சட்டைப் பொத்தான்கள், ஜிப்புகள் மற்றும் பெல்ட் கொக்கிகளில் நிக்கல் கலந்திருக்கும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களான மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற கேட்ஜெட்டுகளில் நிக்கல் கலந்திருக்கும். சில நேரங்களில் அவற்றின் உறைகளில் கூட இருக்கும். வீட்டுப் பொருட்களான சாவிகள், நாணயங்கள் மற்றும் சமையலறை பாத்திரங்களில் நிக்கல் இருக்கலாம்.
நிக்கல் அலர்ஜியின் விளைவுகள்: நிக்கல் அலர்ஜி உள்ளவர்களுக்கு சருமத்தில் அரிப்பு, சிவந்து போதல், சொறி போன்றவை ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் கொப்புளங்கள் வறண்ட சருமம் அல்லது விரிசல் கூட உருவாகலாம்.
நிக்கல் அலர்ஜியால் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?
பெண்கள்: ஆண்களை விட பெண்கள் நிக்கல் அலர்ஜியல் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் பெரும்பாலும் நிக்கல் கொண்ட காதணிகள், மோதிரங்கள் போன்ற அதிக நகைகளை அணிவது இதற்குக் காரணம். காதுகள் அல்லது உடலின் பிற பாகங்களை துளைப்பது நிக்கல் ஒவ்வாமையை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஏனென்றால் இந்த உலோகம் நேரடியாக சருமத்துடன் தொடர்பு கொள்ளும்போது சருமத்தின் உணர்திறன் பாதிக்கப்படுகிறது.
தொழிற்சார் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள்: சிகை அலங்கார நிபுணர்கள், காசாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் உலோகத் தொழிலாளர்கள் போன்ற உலோகப் பொருட்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும் தொழில்களில் இருப்பவர்கள் நிக்கல் அலர்ஜிக்கு உள்ளாகின்றனர். இவர்கள் நாணயங்கள், கருவிகள் போன்ற நிக்கல் கலந்த உலோகப் பொருட்களைக் கையாளுவதால் இவர்களுக்கு இந்த அலர்ஜி ஏற்படுகிறது.
அரிக்கும் சரும அழற்சி உள்ளவர்கள்: எடோபிக் டெர்மடெட்டிஸ் என்கிற சரும அழற்சி உள்ளவர்கள் நிக்கல் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகிறார்கள்.
மரபணு காரணங்கள்: நிக்கல் ஒவ்வாமைக்கு மரபணு கூறுகள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நெருக்கமான குடும்ப உறுப்பினர்களுக்கு நிக்கல் ஒவ்வாமை இருந்தால் பின்வரும் சந்ததியினருக்கும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
நிக்கல் ஒவ்வாமையை தவிர்ப்பது எப்படி?
நிக்கல் அலர்ஜி என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கும். எனவே, நிக்கல் கொண்ட தயாரிப்புகளை தவிர்ப்பது சிறந்த வழி. அல்லது நிக்கல் இல்லாத நகைகளை தேர்வு செய்து அணியலாம். சருமம் மற்றும் நிக்கல் பொருட்களுக்கு இடையே ஒரு தடையை உருவாக்கலாம். அந்தப் பொருட்களுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்தி பிறகு அவற்றை அணிந்து கொள்ளலாம். சில பெண்களுக்கு சேஃப்டி பின் அலர்ஜி ஏற்படும். அவர்களும் சேஃப்டி பின்னின் மேல் நெயில் பாலிஷ் பூச்சு அடித்து அதை பயன்படுத்தலாம். சில கிரீம்கள் வீக்கம் மற்றும் அரிப்பை குறைக்க உதவும்.