
ராமாயணத்தில் அனுமன் எண்ணற்ற பராக்கிரம செயல்களை செய்திருப்பார். அதில் ஒன்றுதான் சஞ்சீவினி மலையை பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்து லக்ஷ்மணனின் உயிரைக் காப்பாற்றியது. அந்த கதையைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ராமாயணத்தில் போரின்போது நாகாஸ்திரத்தால் தாக்கப்பட்ட லக்ஷ்மணனின் உயிரின் ஓசை மெல்ல அடங்கத் தொடங்கியது. வானத்தை கிழித்துக்கொண்டு வந்த அனுமன் லக்ஷ்மணனின் நிலையைக் கண்டு வெகுண்டெழுந்தார். லக்ஷ்மணனின் உயிர்த்துடிப்பு குறைந்து வருவதைப் பார்த்து ஸ்ரீராமரும் அதிர்ச்சியில் உறைந்துப்போய் இருந்தார். லக்ஷ்மணனின் நாடித்துடிப்பை பரிசோதித்த வைத்தியர், ‘இந்த விஷத்தை போக்க சஞ்சீவினி மலையில் உள்ள பிரகாசமான மூலிகை தேவை. அதுவும் அந்த மூலிகையை சூரிய உதயத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே லக்ஷ்மணனின் உயிர் திரும்பும்’ என்று கூறினார்.
இதைக்கேட்டதும் அனுமன் தெற்கிலிருந்து வடக்கே பறந்தார். அதே சமயத்தில் ராவணன் தன்னுடைய நண்பனான காலநேமியை அழைத்து, ‘எப்படியாவது அனுமன் சஞ்சீவனி மூலிகையை கொண்டு வராமல் தடுத்துவிடு’ என்று உத்தரவிட்டான்.
காலநேமி தனது மாய சக்தியால் இமயத்தில் முனிவரைப்போல வேடமிட்டு ‘ராம் ராம்’ என்று ஜெபிக்கத் தொடங்கிறான். மாய ராம நாமத்தில் மயங்கிய அனுமன் முனிவரைக்காண வேண்டும் என்று எண்ணி காலநேமியின் முன்பு வந்து நின்றார். உடனே காலநேமி தனது மாய சக்திகளைப் பயன்படுத்தி அனுமனை கட்டுப்படுத்த முயன்றான்.
‘வானரனே! நீ யார்? என்று கேட்டான் காலநேமி. நான் அனுமன் ராமரின் சேவகன். லக்ஷ்மணரை மீட்க சஞ்சீவனி மலையை தேடி வந்தேன்' என்று கூறினார் அனுமன்.
அதற்கு காலநேமி, 'மலையில் நுழைவது சுலபமில்லை. கந்தர்வர்கள் காவல் காக்கிறார்கள். ஆனால், மாய பொய்கையில் மூழ்கி எழுந்தால், கந்தர்வ தோற்றம் பெற்று உள்ளே செல்லலாம்’ என்று கூறினான். அனுமனும் மாயத்தை அறியாது பொய்கைக்குள் சென்றார். அங்கே சாபத்தால் முதலையாக இருக்கும் மாலினி இருந்தாள். முதலை அனுமனை கவ்வியது. அனுமனுக்கு விபரீதம் புரிந்துவிட்டது.
உடனே விஸ்வரூபம் எடுத்து முதலையின் வாயை கிழித்து தூக்கிப்போட்டார். இதைக்கண்ட காலநேமி பதறிப் போனான். அதேசமயம் இறந்த முதலையிடமிருந்து மாலினி என்ற அப்சர கன்னிகை எழுந்து தனக்கு அனுமனால் சாபவிமோர்ஷனம் கிடைத்தது என்றும் காலநேமி ஒரு மாயாவி என்றும் கூறினாள்.
தப்பிக்க முயன்ற காலநேமியை அனுமன் அழித்தான். பிறகு மாலினி மலையின் வழியைக்காட்ட, ‘அந்த மலையில் உள்ள மூலிகையில் எது அமிர்த சஞ்சீவினி, எது விசலைகரணி, எது சொர்ணகரணி?’ என்று அடையாளம் காண முடியாமல் அனுமன் குழம்பினான். நேரம் ஆகிக்கொண்டிருப்பதை மனதில் வைத்து அனுமன் முழுபர்வதத்தையும் பெயர்த்து எடுத்துக்கொண்டு வானில் பறக்கத் தொடங்கினான். பிறகு அந்த மலையில் இருந்து சஞ்சீவினி மூலிகையை நேரத்திற்கு லக்ஷ்மணருக்கு கொடுத்ததால், அவர் மீண்டும் உயிர் பெற்றார்.