

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருக்கரங்களில் புல்லாங்குழலோடும் சிரசில் மயிலிறகைச் சூடியவாறு புன்னகையோடும் காட்சி தருவதை நாம் பார்த்திருக்கிறோம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் சிரசில் சூட மயிலிறகை ஏன் தேர்வு செய்தார் தெரியுமா? இதற்குப் பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது. அதைப் பற்றி இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளலாம்.
திரேதா யுகத்தின் போது ஒரு சமயம் ஸ்ரீராமரும், சீதாதேவியும் காட்டில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் சீதாதேவிக்கு தாகம் உண்டானது. அவர் ஸ்ரீ ராமரிடம், “ஸ்வாமி. எனக்கு தாகமாக இருக்கிறது. உடனே எனக்கு தண்ணீர் வேண்டும். இந்த பகுதியில் அருந்த தண்ணீர் எங்கே உள்ளது என்று கண்டுப்பிடித்து தண்ணீர் கொண்டு வாருங்களேன்” என்று கேட்டார்.
உடனே ஸ்ரீராமபிரான் பூமித்தாயிடம் தண்ணீர் வேண்டி பிரார்த்தித்தார். அந்த சமயத்தில் அங்கே தோன்றிய ஒரு மயில் இராமபிரானிடம் வந்தது. “இந்த பகுதியில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னைப் பின்தொடர்ந்து வந்தால் அந்த இடத்தை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்...” - மயில் இவ்வாறு ராமபிரானிடம் கூறியது.
ஸ்ரீராமபிரானும், சீதாதேவியும் வழித்தவறிச் செல்லாமல் இருக்க அந்த மயிலானது தனது இறகுகளில் இருந்து ஒவ்வொரு இறகாக பிய்த்து அது தான் சென்ற பாதையில் போட்டுக்கொண்டே சென்றது. அதைப் பின்தொடர்ந்து ராமபிரானும், சீதாதேவியும் சென்று கொண்டிருந்தனர்.
மயில் ஒரு இடத்தில் குளம் ஒன்றைக் காட்டியது. தண்ணீரைக் கண்ட இராமபிரானும், சீதாதேவியும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சீதாதேவி தண்ணீரை அருந்தி தாகத்தைத் தணித்துக் கொண்டார். ஆனால், அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. வழிகாட்டிய மயில் தனது இறகுகளைப் பிய்த்துப் போட்டதால் அது இறந்து போய்க் கிடந்தது.
மயிலின் தியாகத்தை எண்ணி மனம் வருந்திய ஸ்ரீராமபிரான், “உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன். இந்த பிறவி மட்டுமல்லாது எனது அடுத்த பிறவியிலும் உன்னை நான் மறக்கவே மாட்டேன்...” என்று வரமளித்தார்.
ஸ்ரீ இராமபிரான் பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக பூலோகத்தில் அவதரித்தபோது முந்தைய அவதாரத்தில் வழிகாட்டிய மயிலின் தியாகத்தின் நினைவு கூறும் விதமாக தனது சிரசில் மயிலிறகை சூடிக்கொண்டதாக ஐதீகம்.
ஒருவர் நமக்குச் செய்த நன்றியை இந்த பிறவி மட்டுமின்றி மறுபிறவியிலும் நாம் மறக்கக் கூடாது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
