

ஶ்ரீ மணவாள மாமுனிகள் 655-வது திருநட்சித்திர கொண்டாட்டம்.
“நம்மில் பலருக்கு தெரிந்த விஷயம் இருக்கும். ஆனால் அதில் தெரியாத உண்மைகள் நிறைய இருக்கும்”.
“ஶ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்தியாதி குணர்ணாவம் ;
யதீந்திரப் பிரணவம் வந்தே ரம்யா ஜாமாதரம் முனிம்”
என்று வைணவ கோயில்களில் கோஷ்டி சேவிக்கும் பொழுது மேல சொன்ன தனியன் சேவிப்பார்கள். பொதுவாக இந்தத் தனியனின் ஆசிரியர் யார்? எந்தச் சூழ்நிலையில், எந்தச் சாற்று முறை எப்பொழுது தொடங்கப்பட்டது?
பொதுவாகப் பக்தி இலக்கியங்களில் பெருமாளை வாழ்த்தி பாடிய ஆழ்வார்கள் பற்றிப் பார்த்து இருப்போம்.
உதாரணத்துக்கு ஶ்ரீ ஆண்டாள் அரங்கன் மீது காதல் கொண்டு அவனையே கல்யாணம் செய்து கொள்ள முப்பதும் தப்பாமல் திருப்பாவை பாடியுள்ளார். அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் இப்படிப்பட்ட தனியன் எந்த ஆச்சாரியார் பாடியிருப்பார்?
முதலில் அந்தத் தனியனின் பொருள் என்னவென்று பார்ப்போமோ?
“திருமலை ஆழ்வாரின் (இவருக்குத் திருவாய்மொழிப்பிள்ளை ஶ்ரீசைலேசன் என்கிற பெயரும் உண்டு) கருணைக்குப் பாத்திரமானவரும், ஞானம், வைராக்கியம் பக்தி ஆகிய குணங்களுக்குக் கடலானவரும் யதிகளில் சிறந்தவரான ஸ்ரீ ராமானுஜரை வழிபடுவருமான ஸ்ரீ மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்” என்று அர்த்தம்.
இந்தத் தனியனுக்கு ஆசிரியர் யார் என்றால் ஆச்சரியப்படுவீர்கள்! ஆனால் அது தான் உண்மை. அதை பின்னால் சொல்கிறேன்.
ஆமாம்! எந்தச் சூழ்நிலையில் இந்தத் தனியன் உருவானது யார் சொன்னது என்று அறிய ஆவல் தானே?
இதோ அதற்கான விடையும் விளக்கமும்.
ஸ்ரீரங்கத்துக் கோயில் குறிப்பேடுகளில் கிடைக்கும் விவரமாய்க் கிபி 1430-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சி.
தமிழ் பிரமாதீச வருடம் ஆனி மாத மூல நட்சத்திரம் கூடிய நாளில் நடந்தது என்று தெரிகிறது.
அச்சமயம் மணவாள மாமுனிகள் ஸ்ரீரங்கத்தில் தொண்டாற்றிக் கொண்டிருந்தார். அவரது உபன்யாசங்கள் பிரசித்தி பெற்று விளங்கின.
அரங்கனின் கட்டளையாக நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியை விளக்கும் வகையில் திருக்கோயில் மண்டபத்தில் உபன்யாசங்கள் நடைபெற்று வந்தன.
அரங்கன் அவருக்குச் சீடனாக இருந்து திருவாய்மொழியின் சிறந்த வியாக்யானம் ஆகிற ஈடு முப்பத்தாறாயிரப்படியின் அரும்பொருளை அவரிடம் கேட்க எண்ணினார்.
மாமுனிகளின் உபன்யாசங்கள் ஒரு வருடம் நிறைந்து முற்றுப்பெறும் நேரம் வந்தது.
எப்படித் தன் சரிதத்தை லவகுசர் வாயிலாகக் கேட்டு இராமபிரான் மகிழ்ந்தாரோ, அது போல ஒரு வருடம் முழுக்க உத்சவங்களை எல்லாம் நிறுத்திவிட்டு பிராட்டியாரோடும், அடியவர்களுடனும் மாமுனிகளிடம் காலட்ஷேபத்தைக் கேட்டு அருளினார் அரங்கன்.
எப்படிப் பல கோவில்களை அர்ச்சாவதாரத்தில் இருந்து கொண்டு ஆழ்வார்கள் பாடிய பாடலை கேட்டு பகவான் மகிழ்ந்தாரோ அதே போல ஈடு முப்பத்தாறாயிரப்படி காலக்ஷேபம் கேட்டு உள்ளம் குளிர்ந்தார்.
மணவாள மாமுனிகளும் அதைச் செய்து முடித்துவிட்டு காத்திருக்கிறார்.
இறுதியில் சாற்று முறை தொடங்கியது. ஒரு சிறுவன் வந்து அந்த வைஷ்ணவர்கள் கோஷ்டியில் சேர்ந்து கொண்டான்.
சாற்றுமுறையில் தொடக்கமாக மேலே குறிப்பிடப்பட்ட ஶ்ரீ சைலேச தயாபாத்திரம் என்று தொடங்கும் ஸ்லோகத்தை அனைவரையும் கேட்க, பாடி, பின்னர் காணாமல் போனான் அந்தச் சிறுவன்.
அச்சிறுவன் வேறு யாருமில்லை சாட்சாத் திருவரங்கப் பெருமானே! மாமுனிகளின் உபன்யாசங்களைக் கேட்டு அப்படி வந்திருக்கிறார்.
நம்பெருமாளுக்கு இவரை ஆசாரியனாக இன்றும் கொண்டாடுகிறார்கள்.
மாமுனிகளின் பிரசங்கங்களே அரங்கநாதரே விரும்பி கேட்டார் என்பதால் அரங்கன் குரு தட்சணையாக ஆதிசேஷனை விட்டுச் சென்றார் என்றும் கருதப்படுகிறது.
முடிவில் ஆச்சாரய வந்தனமாக அவரே ஒரு தனியன் சொல்லிச் சென்றிருக்கிறார் என்று கூடியிருந்தோர் பின்னர் தான் உணருகிறார்கள்.
இந்தத் தனியனுக்கு ஆசிரியர் என்று கருதப்படுபவர் அரங்கன் என்று நாம் தொழும் சாட்சாத் ஶ்ரீமன் நாராயணன் என்பதைத் தெரிந்து கொண்டோம்.
இப்போது புரிந்து கொண்டீர்களா? இந்தத் தனியன் பாடியது யார் என்று?
எனவே தான் இந்தத் தனியன் ஆழ்வார்களையும் அவர்களின் திவ்ய பிரபந்தங்களையும் போற்றும் தென்கலை வைஷ்ணவர்களுக்கு அவர்களுக்குத் தினமும் மற்றும் விழா காலங்களிலும், பாடும் முதலும் கடைசியுமான சிறப்பு வாய்ந்த தனியன் ஆனது.
மாமுனிகள் கிபி 1370ஆம் வருடம் இன்றைய திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரி என்ற திருத்தலத்தில் அவதரித்தார்.
தமிழ் பஞ்சாங்கப்படி சாதாரண வருஷம் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரம் கூடிய சுப தினம் அன்று அவதாரம்.
திருவாய்மொழிப்பிள்ளை என்ற ஆச்சாரியார் மூலம் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடர் ஆனார்.
பிரபந்தத்தில் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகவே அவருக்குத் திருவாய்மொழி பிள்ளை என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த ஆசானின் அறிமுகம் அழகிய மணவாளனின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்புமுனை ஆயிற்று.
மணவாள மாமுனிக்கு எல்லா விஷேச அர்த்தங்களை உபதேசம் செய்தவர்.
அவர் ஸ்வாமி மணவாள மாமுனியிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொள்கிறார்.
அது வடமொழியில் ஸ்ரீராமானுஜர் அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யத்தை ஒரு முறை மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு ஆழ்வாருடைய பாசுரங்களையே எடுத்துரைக்க வேண்டும் என்பது தான்!
மேலும் ஸ்ரீரங்கத்திலேயே இருந்து ஸ்ரீ ரங்கநாதருக்குத் தொண்டு செய்யவேண்டும் என்றும் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
அழகே மணவாளனும் குருவின் கட்டளை ஏற்று ஸ்ரீரங்கம் சென்றடைந்து, கோயில் நிர்வாகப் பொறுப்பையும் வைணவ சமூகத்தின் தலைமை பொறுப்பையும் ஏற்றார்.
ஆன்மீக கடமைகளுக்கு இல்லற பந்தம் இடையூறு என்று கருதி ராமானுஜர் மாதிரியே தானும் துறவறம் மேற்கொண்டார். சடகோப ஜீயர் சுவாமிகளிடம் சன்னியாசம் பெற்றார்.
அதனால் தன் வாழ்நாளில் நாலாயிர திவ்யபிரபந்தத்தைப் பிரச்சாரம் செய்வதையே குறிக்கோளாக ஏற்றுக்கொண்டார்.
அந்த நேரத்தில் ஸ்ரீரங்கம் (14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்) முஸ்லிம் படையெடுப்பின் மோசமான விளைவுகளை எதிர்கொண்டிருந்தது.
இதனால் கட்டமைப்பு ரீதியாகப் பாழடைந்து, புனிதமற்று, அறிவில் தரிசாகி, ஆன்மீக சமூகம் தார்மீக ஊழல் நிறைந்ததாக இருந்தது.
உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் மற்றும் சீர்கேடு ஆகியவை பரவலாக இருந்தன.
அந்த நேரத்தில் வெவ்வேறு திறன்களில் செயல்பட்டு வந்த மக்களை விரோதித்துக் கொள்ளாமல், அதே சமயம் தன்னுடைய ஆன்ம பலத்தாலும் பெரும் முயற்சியாலும் ஸ்ரீரங்கம் கோவிலில் தினசரி சேவைகளையும் வருட வைபவங்களை, உத்சவங்களை முன்பு போல் திரும்பவும் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தை முன்னிருத்தவேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து இதுவரை பின்னணியில் தள்ளப்பட்ட ஆச்சார்யர்களின் அறிவார்ந்த படைப்புகளை முன்னிலைக்குக் கொண்டு வர கடுமையாக உழைத்தார்.
அவரது அர்ப்பணிப்பு, பக்தி, ஞானம், கடும் உழைப்பு ஆகியவை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகப் பொறுப்பில் அவரை அமர வைத்தது. மேலும் அவரது காலத்தில் அனைத்து ஸ்ரீ வைணவர்களுக்கும் தலைவராகக் கொண்டாடப்பட்டார்.
கேட்டவர்களின் மனத்தை ஈர்ப்பதாகவும், கேளாதவர்களுக்கு கேட்க வேண்டும் என்று ஆசையை வளர்ப்பதாகவும் மாமுனிகளின் வாக்கு அமைந்திருந்தது.
இன்றும் நாம் வழிபடும் மாமனிதனின் விக்ரங்களும், படங்களும் அவர் ஆசனத்தில் அமர்ந்திருப்பவர் தான் இருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரமே என்று வைஷ்ணவ சமுதாயம் கருதுகிறது.
இப்படிப் பெருமை வாய்ந்த ஶ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் கொண்டாடும் இந்த இனிய வேளையில் அவரது ஏற்றத்தை கீழ் கண்ட பாடலுடன் நிறைவு செய்கிறேன்.
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே
ஆழ்வார், ஆச்சாரியார், எம்பெருமானார், சுவாமி மணவாளமாமுனிகள் (ஜீயர்) திருவடிகளே சரணம்!