புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாகவும், பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில்தான் பெருமாள் மக்களை காக்க பூமியில் அவதரித்ததாக நம்பப்படுகிறது. அதை கொண்டாடும் வகையிலேதான் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் பெருமாளுக்கு சிறப்பு வழிப்பாடுகள் செய்யப்படுகிறது.
சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு செல்வதைத்தான் மாதப்பிறப்பு என்று சொல்கிறோம். சூரியன் எந்த ராசியை சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்குரிய கடவுளை வழிப்படுவது மரபு. அந்த வகையில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம்தான் புரட்டாசி மாதம்.
கன்னிராசியின் அதிபதி புதன் பகவான். புதன் பகவான் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதனால்தான் புரட்டாசி மாதம் பெருமாளை வழிப்படுவது மிக சிறந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிப்பட்டால், அனைத்து விதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்து விடுபட்டு வளமான வாழ்வைப் பெறலாம் என்பது நம்பிக்கை.
வெங்கடேச பெருமாள் திருப்பதி திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தான். அம்பிகைக்கு உரித்தான நவராத்திரியும் புரட்டாசியிலேதான் வரும். பித்ரு தோஷங்களை போக்கக்கூடிய முக்கிய நாளாக கருதப்படும் மகாளய அமாவாசையும் புரட்டாசியில்தான் வரும்.
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாததற்கு காரணம் தெரியுமா? புரட்டாசி மாதம் என்பது வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலம். மழையும் அதிக அளவில் பெய்யாமல் லேசாக பெய்து பூமியின் சூட்டை கிளப்பிவிட்டு விட்டு போய்விடும். இந்த காலநிலை வெயில் காலத்தில் ஏற்படும் காலநிலையை காட்டிலும் மிகவும் மோசமானது.
இந்த சமயத்தில் நாம் அசைவம் சாப்பிட்டால், அது நம்முடைய உடல் சூட்டை அதிகரிப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும், செரிமான கோளாறுகளும் அதிகமாக ஏற்படும். இதனால்தான் நம் முன்னோர்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக் கூடாது என்று கூறினார்கள். நம் முன்னோர்கள் அறிவியலை ஆன்மீகத்தில் புகுத்தி அதன் மூலமாக அவற்றை மக்களை பின்பற்ற வைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.