கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட மண்ணூர் கிராமத்தில் அமைந்துள்ளது கைம்ம குன்னத்துக் காவு பகவதியம்மன் கோயில். இது மண்ணூருக்கு மட்டுமின்றி, சுற்று வட்டாரத்தில் உள்ள நகரிபுரம், பத்ரிபாலா போன்ற இடங்களில் வசிப்போருக்கும் எல்லை தெய்வமாகத் திகழ்கிறது.
இந்தக் கோயில் தோன்றிய விதம் குறித்து ஊர் மக்கள் கூறும் வழிவழியாக வந்த கதை ஒன்று உள்ளது. விவசாயி ஒருவர் நிலத்தில் வேலையை முடித்துவிட்டு தனது ஊருக்குப் போகக் கிளம்பியபோது திடீரென்று பெருமழையும் வெள்ளமும் வந்தது. இதனால் அவரால் அந்த இடத்தைக் கடந்து போக இயலாமல் பரிதவித்து நின்றிருந்தார்.
அப்போது அங்கு சிவப்பு நிற புடவை அணிந்த ஒரு பெண்மணி நெற்றியில் பெரிய பொட்டோடு அங்கே தோன்றி அவரிடம் தனது கையைப் பிடித்துக்கொள்ளச் சொன்னாளாம். அவரும் அவ்வாறே பிடித்துக்கொள்ள அந்த வெள்ள நீரைக் கடந்து அவரை அவரது ஊரில் கொண்டு விட்டாளாம். தனக்கு உதவிய அந்தப் பெண்மணிக்கு நன்றி கூற அவர் திரும்பிப் பார்த்தபோது அங்கே ஒருவரையும் காணவில்லை. வெள்ளம் மட்டும் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அந்தப் பெண்மணி, அருகிலிருக்கும் ஓடையில் தான் இருப்பதாகத் தெரிவித்தாள். அந்த ஓடையில் கிடைத்த பகவதி சிலையை கொண்டு வந்த அந்த விவசாயி, ‘பகவதிதான் தங்களைக் காக்க வந்திருக்கிறாள்’ என்று ஊரில் சென்று எல்லோரிடமும் கூறினார்.
பகவதி சிலையை கண்டெடுத்த இடத்தில் ஒரு கோயில் கட்டி, ‘எண்டே பகவதி! எங்களைக் காக்க வந்த அம்மையே!’ என்று பரவசமாக பகவதியை ஊர் மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள். தனது கையைக் காட்டி அந்த விவசாயிக்கு பகவதி அருளியதால், மளையாளத்தில் அந்தப் பொருள்பட, 'கைம்ம குன்னத்து காவு பகவதி' என்று பெயரிட்டு வழிபட ஆரம்பித்தனர்.
இக்கோயில் பகவதி அம்மனுக்கு பக்தர்கள் தங்கள் பெயர், நட்சத்திரத்தைச் சொல்லி புஷ்பாஞ்சலி வழிபாடு செய்வார்கள். அதுதான் இங்கே பிரதான வழிபாடு. இங்கே பிரசாதம் பாயசம்தான். பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோயிலில் பணம் கட்டி விட்டால் அவர்கள் சார்பில் கோயிலிலேயே பாயசம் பிரசாதமாக வைத்து நைவேத்தியம் செய்து அதை பக்தர்கள் எல்லோருக்கும் விநியோகம் செய்வார்கள்.
கோயில் அமைந்திருக்கும் இடம் மிக விஸ்தாரமாக உள்ளது. ஒரு பெரிய மைதானத்தில் சதுர வடிவில் சின்னதாக ஒரேயொரு பகவதி சன்னிதியுடன் இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் வந்ததும் முகப்பில் ஒரு பெரிய மண்டபம் அமைக்கப்பட்டு அங்கே கல்யாணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறுகின்றன.
இக்கோயிலில் வருடந்தோறும் நடக்கும், 'வேளா' என்னும் திருவிழா மிகவும் பிரசித்தமானது. அக்கம்பக்க கிராமத்தில் உள்ளோர் அனைவரும் கூடி அன்று பகவதி அம்மனுக்கு வழிபாடு நடத்துவார்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இங்கே தினசரி நடைபெறும் 'தோல் பாவைக்கூத்தும்' மிகவும் பிரபலம். இக்கோயிலில் நவராத்திரி பண்டிகை பத்து நாட்களும் கோலாகலமாக நடைபெறும். அதேபோல கார்த்திகை தீபமும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.
மண்ணூர், நகரிபுரம், பத்திரிபாலா மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் இந்த பகவதியை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். காலப்போக்கில் இந்த ஊர்க்காரர்கள் வேறு இடங்கள், வேறு நாடுகளுக்கு தங்கள் பணி நிமித்தம் சென்றுவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது, மண்ணூர் கைம்ம குன்னத்து காவு பகவதி கோயிலுக்கு வந்து வழிபட்டு, பகவதியின் அருளையும், ஆசியையும் பெறத் தவறுவதில்லை.