தென்னகத்தின் எல்லோரா - வெட்டுவான் கோயில் தெரியுமா?

தென்னகத்தின் எல்லோரா - 
வெட்டுவான் கோயில்
தென்னகத்தின் எல்லோரா - வெட்டுவான் கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் மார்க்கத்தில் 22 கிலோமீட்டர் தூரத்தில், கழுகுமலை உள்ளது. கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி என்ற பிரபல முருகன் குடைவரைக் கோயில் உள்ளது. அது அருணகிரிநாதரால் பாடப்பட்ட தலம். கழுகுமலைக்கு மேலே, 150க்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர்களின் சிலைகள், சமணர்களின் புடைப்பு சிற்பங்கள், வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ள சமணர் படுகையும் அமைந்துள்ளது.

கழுகுமலையின் மேலேயுள்ள வெட்டுவான் கோயில், தென்னகத்தின் எல்லோரா என்றழைக்கப்படுகிறது. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் போலவே, கழுகுமலையிலுள்ள வெட்டுவான் கோயிலும் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட ஒற்றைக் கல் கோயில். இதனை ஆங்கிலத்தில் Monolithic rock cut temple என்று அழைக்கின்றனர்.

வெட்டுவான் கோயில், கழுகுமலையின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது. கழுகுமலையில் ஏறிச் செல்லும்போது, இது கண்களுக்குத் தெரியாது. 10 அடி கீழே இறங்கிசெல்லும் பாதையில் சென்றபிறகு, இந்தக் கோயிலைக் காணும்போது, இதன் அழகு நம்மைக் கவர்கிறது. மலையில் 25 அடி உயர சதுரம் தனியாக பிரிக்கப்பட்டு, அந்த சதுரத்தில் கோயில் குடையப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி பாதை 'ப' வடிவில் வெட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் மேலிருந்து கீழாக குடையப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது, அக்காட்சி நம்மை வியப்பிலாழ்த்துகிறது. இது எவ்வளவு கடினமான செயல் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.

இதையும் படியுங்கள்:
கூகுளின் Car Crash Detection அம்சம்!
தென்னகத்தின் எல்லோரா - 
வெட்டுவான் கோயில்

விமானம் சார்ந்த பணிகள் முழுவதுமாக முடிவடைந்தாலும், கோயில் பணிகள் முழுமையடைய வில்லை. கோயிலில் உள்ள சிற்பங்களின் அழகு நம்மைக் கவர்கிறது. இங்கு சிவன், திருமால், பிரம்மா சிலைகளும், பூதகணங்களின் சிலைகளும், தேவகன்னியரின் சிலைகளும் நம் கண்முன்னே அவர்களை கொண்டுவருவதைப் போல், நுணுக்கமாகவும், தத்ரூபமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிருதங்கம் வாசிப்பதாக அமைந்திருப்பது மிகவும் அரிய காட்சி. விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி தேவர் சிற்பங்கள் உள்ளன. அதற்கு கீழே யாளிகளின் வரிசையும், கபோதகமும் (மழை நீர், கோயில் சுவற்றில் விழாமல் சற்று தள்ளி விழுவதற்கான ஒரு கோபுர அமைப்பு) அமைந்துள்ளன. விமானத்தின் மேற்கில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சியளிக்கின்றனர். சில முழுமை பெறாத சிலைகளும், சில பின்னப்பட்ட சிலைகளும் உள்ளன. கோயிலின் அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் மிகவும் (மலையைக் குடைந்து கட்டியபடியால்) குளிர்ச்சியாக உள்ளது. உள்ளே ஒரு விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

வெட்டுவான் கோயில் கழுகுமலை
வெட்டுவான் கோயில் கழுகுமலை

இந்தக் கோயில், பாண்டியர்கள் காலத்தில், 8ஆவது நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இதனைக் கட்டியவன் பாண்டியன் மாறஞ்சடையன். இந்த கழுகுமலை, பண்டைய காலத்தில் அரை மலை என்றழைக்கப்பட்டது. ஊர், பெருநெச்சுறம் என்றும், திருநெச்சுறம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு குடைவரைக்கோயில்கள் இருப்பினும், இது மாமல்லப்புரத்தைப் போல், முழுவதுமாக கல்லில் செதுக்கப்பட்ட கோயிலாக உள்ளது.

தென் தமிழ்நாட்டிற்குச் செல்லும்போது, வெட்டுவான் கோயிலைக் கண்டிப்பாக கண்டுகளியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com