ஒரே கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள் எந்த கோவிலில்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

ஸ்ரீஉலகளந்த பெருமாள்...
ஸ்ரீஉலகளந்த பெருமாள்...
Published on

ன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் தலங்கள் திவ்ய தேசங்கள் என அழைக்கப் படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகளிலும் திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. காஞ்சிபுரத்தில் ஒரே கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது சிறப்பு. அது எந்த கோவில் என்பதையும் அதில் அமைந்துள்ள திவ்ய தேசங்களைப் பற்றியும் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள கோவில் அருள்மிகு ஆரணவல்லித் தாயார் சமேத உலகளந்த பெருமாள் திருக்கோவில். இக்கோவிலில் திருஊரகம், திருகாரகம், திருநீரகம் மற்றும் திருகார்வானம் என்ற நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.

மூலவர் ஸ்ரீஉலகளந்த பெருமாள் திரிவிக்ரமனாய் நின்ற திருக்கோலத்தில் புஷ்பகோடி விமானத்தின் கீழ் சேவை சாதிக்கிறார். இத்தலத்தில் பெருமாள் மேற்கே திருமுக மண்டலத்துடன் திரிவிக்ரம அவதார வடிவத்தில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார். தனது இடது கரத்தினை நீட்டி அதில் இரண்டு விரல்களைக் காட்டி தனது இரண்டு அடிகளால் மண்ணையும் விண்ணையும் அளந்து முடித்ததை உணர்த்தி வலது கரத்தில் மீதம் உள்ள ஓரடிக்கு இடம் எங்கே என்று கேட்பது போல ஒரு விரலைக் காட்டியும் மகாபலியின் திருமுடி மீது வலது திருவடியைச் சாத்தியும் இடது திருவடியை ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் அளந்து விட்டது போல உயர்த்தியும் பெருமாள் கம்பீரமாக உலகளந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீ ஆரணவல்லித் தாயார் (மகாலஷ்மி) ஒரு தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். தாயாரை பிரதி வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து சேவித்தால் சகல சௌபாக்கியங்களையும் அருளுவார். இத்தலத்தில் ஸ்ரீஆண்டாள், ஆழ்வார் மற்றும் ஆசாரியார்கள், விஷ்வக்சேனர், மணவாளமாமுனிகள், கருடன் முதலான சன்னிதிகள் அமைந்துள்ளன. திருக்கோவில் இராஜகோபுரத்திற்கு வெளியில் எதிரில் சதுர்புஜ ஆஞ்சநேயர் சன்னிதி அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார்.

இனி இக்கோவிலில் அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஸ்ரீ ஊரகத்தான் : பெருமாள் இச்சன்னிதியில் ஆதிசேஷன் ரூபமாக சேவை சாதிக்கிறார். தெற்கே திருமுக மண்டலம்.

ஸ்ரீ காரகத்துப் பெருமாள் : பெருமாள் ஆதிசேஷனில் வீற்றிருக்கும் திருக்கோலம். வடக்கே திருமுக மண்டலம்.

ஸ்ரீ நீரகத்துப் பெருமாள் : இங்கு பெருமாள் நின்ற திருக்கோலம். தெற்கு திருமுகமண்டலம்.

ஸ்ரீ கார்வானப் பெருமாள் : பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் நின்ற திருக்கோலம். வடக்கே திருமுகமண்டலம்.

இத்தலத்தில் உள்ள நான்கு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

நீரகத்தாய் நெடுவனரயினுச்சி மேலாய்

நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் ஒண்துறைநீர் வெஃகாவுள்ளாய்

உள்ளுவார் உள்ளத்தாய் ! உலகமேத்தும்

காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா

காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் பேராதென் னெஞ்சினுள்ளாய்

பெருமான் உன் திருவடியே பேணினேனே.

- திருமங்கையாழ்வார்

இதையும் படியுங்கள்:
தன்மதிப்பு - தன்னம்பிக்கை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?
ஸ்ரீஉலகளந்த பெருமாள்...

கச்சி ஊரகம் என்று அழைக்கப்படும் இத்தலத்தின் புஷ்கரணி வாமன புஷ்கரணி என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் பாஞ்சராத்ர முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

திருமணத்தடைகள் நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க, ராகு கேது தோஷங்கள் விலக திருஊரகத்தானுக்கு வெள்ளி மற்றும் ஞாயிறுகிழமைகளில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பால்பாயாசம் நைவேத்யமும் செய்து வழிபடும் பிரார்த்தனை ஸ்தலமாகும்.

உலகளந்த பெருமாள் திருக்கோவிலில் வைகாசியில் வசந்த உற்சவம், ஆவணியில் திருபவித்ரோத்ஸவம், திருஅவதார உற்சவம் (ஓணம் பண்டிகை), புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை உற்சவம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி மற்றும் அத்யாயன உற்சவம், தை மாதத்தில் பத்து தினங்கள் பிரம்மோற்சவப் பெருவிழா, பங்குனியில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண மஹோத்ஸவம் முதலான உற்சவங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

காலை ஆறு மணி முதல் பகல் பனிரெண்டு மணிவரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இத்தலத்திற்குச் சென்று பக்தர்கள் வழிபடலாம்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு மிக அருகிலேயே காஞ்சி காமாட்சி அம்பாள் திருத்தலம் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com