கர்ணன் மறுத்த காண்டீவம்!

கர்ணன் மறுத்த காண்டீவம்!

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்களின் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறி கொடுத்தனர். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக்கொள்!” என்றான். ஆனால், கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்து விட்டான்.

“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்.

“ஆஹா! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய்!” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

ர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!” என்றார்.

“அது என்ன?” என்று கேட்டான் அர்ஜுனன்.

“நேரம் வரும்போது சொல்கிறேன்!” என்றார் வியாசர்.

ல ஆண்டுகள் கழிந்தன. மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான். அப்போது, “அர்ஜுனா! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்ல உள்ளேன். அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்கள் அனைவரையும் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்.

கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன், தனது தேரில் அந்தப் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள். அவர்களை பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால், அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்தி விட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன். அதுவும் வெறும் சாதாரணத் திருடர்களிடம்.

வெட்கத்தால் தலை குனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். “அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது!” என்று கூறினார் வியாசர்.

“கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் இந்த பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது. இதுவரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால், இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.

அதற்கு வியாசர், “உன்னால் இந்தக் காண்டீவத்தை இனி நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால்தான் நீ காண்டீவத்தை பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்.

மேலும், “சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்தபோது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கி விட்டாய். ஆனால், கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும். அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து, காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான்!” என்றார் வியாசர்.

இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட, அந்த பலத்தைத் திருமால்தான் வழங்குகிறார் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது அல்லவா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com