

கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சியம் நகரில் உள்ள புலிங்குடி என்ற இடத்தில் அரபிக் கடற்கரையில் ஒரு பழமையான சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆழிமலா மகாதேவர் கோயில் என அழைக்கப்படுகிறது. ஆழி என்றால் கடல். மலா என்றால் மலை. கடலும் மலையும் சேர்ந்த இடம் ஆழி மலா கடற்கரை ஆகும்.
கேரளாவில் சிவன் கோயில்களை மகாதேவர் கோயில் என்று அழைப்பார்கள். முற்காலத்தில் இப்பகுதியில் புலிகள் அதிகமாகக் காணப்பட்டதால் புலிங்குடி என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். மிகவும் பழமையான இச்சிவன் கோயில் தமிழ்நாட்டுக் கோயில் பாணியில் கட்டப்பட்டுள்ளது.
கோயிலின் உள்ளே ஒரு அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. சுற்றிலும் தீபங்கள் ஒளிர காட்சி தரும் சிவனைக் காண கண் கோடி வேண்டும். அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு பால், தயிர், சந்தனம், நெய், விபூதி எனப் பலவகை பொருட்களாலும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
ஆழிமலா சிவன் கோயிலில் உமா மகேஸ்வரி பூஜை செய்தால் இல்லறம் சிறக்கும் மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும் என்று நம்பப்படுகிறது.
இந்த பழமையான சிவன் கோயில் தீர்த்தத்திற்கு ஒரு புராண கதை சொல்லப்படுகிறது. பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீம சேனன் தன் முழங்காலால் இங்குள்ள ஒரு பாறையை முட்டித் துளையிட்டபோது, அதன் வழியே தண்ணீர் பெருகி வந்ததாம். இச் சுனை நீர் தான் இங்கு தீர்த்தமாக பயன்படுகின்றது என்று சொல்லப்படுகிறது. கோடை காலத்தில் கூட வற்றிப் போகாத இத்தண்ணீர் மிகத் தெளிவாகவும் தூய்மையாகவும் மிகுந்த சுவையுடையதாகவும் இருக்கிறது. நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இப்பழமையான கோயிலுக்கு அருகில் 18 m (58 அடி) உயரமான வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட பெரிய சிவனின் சிலை அனைவரையும் ஈர்க்கிறது. சடாமுடி விரிந்த நிலையில் சிவன், தன் சிரம்மீது கங்கையுடன் காணப்படுவதால் கங்காதேஸ்வரர் என்று கங்கையின் பெயருடன் சேர்த்து அழைக்கப்படுகிறார்.
இச்சிற்பத்தில் சிவன் நான்கு கைகளுடன் ஒரு பாறையின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். ஒரு காலை மடக்கி ஒரு காலை தரையில் வைத்த நிலையில் நேராகப் பார்க்காமல் வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு கையில் சூலாயுதத்தை உறுதியாகப் பற்றி கொண்டிருக்கும் இச்சிவன் மறு கையால் தன் சடாமுடியை விரித்தவாறு காட்சியளிக்கிறார். முன் வலது கை வலது தொடையின் மீது உள்ளது. பின் இடது கையில் உடுக்கையை வைத்துள்ளார். விரிந்த சடாமுடிக்குள் அழகான கங்காதேவி இருக்கிறார். சிவனது கழுத்திலும் மணிக்கட்டுகளிலும் ருத்ராட்ச மணி மாலைகள் உள்ளன.
2014 ஆம் ஆண்டு இந்த அற்புதமான ஆழிமலா சிவன் சிலை செய்யும் பணி தொடங்கியது. ஆறு ஆண்டுகள் கழித்து 2020ல் சிலையின் திறப்பு விழா நடைபெற்றது. திருவனந்தபுரம் நுண் கலைக் கல்லூரியில் படித்த பி எஸ் தேவதத்தா என்ற இளம் சிற்பி இச்சிலையைச் செய்தார்.
18 அடி உயரப் பாறையின் மீதுள்ள 58 அடி உயரச் சிவன் சிலை பார்க்க பிரம்மாண்டமாக இருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகின்றனர்.
கோயிலின் உட்புறம் விநாயகர், ஐயப்பன், பார்வதி போன்ற தெய்வங்களின் உருவ சிலைகள் உள்ளன. கோயிலின் உள்சுற்றுச்சுவரில் கண்ணைக் கவரும் அழகான சுவர் ஓவியங்கள் காணப்படுகின்றன.
ஆழிமலா சிவன் கோயிலுக்கு அதிகாலை சென்று சூரிய உதயத்தைப் பார்த்து ரசித்து பின் கோயிலுக்குள் சென்று பூஜைகள் செய்து இறைவனை வணங்கி மீண்டும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து ரசித்த பின்பு வீடு திரும்புவது ஒரு அற்புதமான அனுபவம்.