

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது தனித்துவமான நட்சத்திர கிரி சுப்ரமணியசுவாமி கோவில். இங்கு நாகாபரணத்துடன் முருகனும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒரு சேர காட்சி தருகிறார்கள். எழில் பொங்கும் ஜவ்வாது மலையில் உருவாகி வங்கக் கடலில் சங்கமமாகும் செய்யாற்றின் கரையோரமாக இந்த தலம் உள்ளது. மலையே மகேசனாக அருளும் திருவண்ணாமலை கலசப்பாக்கம் அருகே வில்வாரணி நட்சத்திர கிரி மலையின் நாயகனாக வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி அருள்பாலிக்கிறார்.
27 நட்சத்திரங்களும், சிவ சர்ப்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு வேறு எங்கும் இல்லை. இந்த கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
முருகன் வேல் விளையாட்டின் போது இத்தலத்திலிருந்த சப்த ரிஷிகளின் தலை துண்டிக்கப்பட்டது. இதனால் இரத்த ஆறு பெருகியது. இதற்கு செய்நதி என்ற பெயர் வந்தது. இதனால் முருகனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் வழிபட பார்வதி தேவி கூறினார்.
எனவே வலது கரையில் , காஞ்சி, கடலாடி, மாடம்பாக்கம், மாதிமங்கலம், ஆலத்தூர், குருவி மலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடது கரையில் வாசுதேவன் பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லி மேடு, மேட்டுப்பாளையம், பழங்கோவில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார் முருகன்.
முருகன் லிங்கமான வரலாறு
முற்காலத்தில், ஆடிக் கிருத்திகையில், 2 சிவாச்சாரியார்கள் இந்த 14 தலங்களையும் ஒரேநாளில் தரிசித்த பிறகு திருத்தணி சென்று முருகனை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆடிக்கிருத்திகைக்கு ஒருமுறை திருத்தணி செல்ல தடங்கல் நேர்ந்தது. இதனால் இவர்கள் மனம்வருந்த, முருகன் கனவில் வந்து, "ஒரு கள்ளிப் புதருக்குள் சுயம்பு லிங்கமாக இருக்கும் என்னை சூரிய சந்திரனும், 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் சதா சர்வகாலமும் பூஜிக்கின்றனர். அங்கு என்னை தரிசித்து மனக்குறை நீங்கப் பெறலாம்," என்று கூற, நட்சத்திர
கிரி மலையடிவாரத்தில் சந்திரபுஷ்கரிணி சுனையில் உள்ள நாகம் இவர்களை வழிநடத்த, அதன் ஆலோசனையில் அப்படியே செல்ல, 5 தலைநாகம் குடைபிடிக்க, கள்ளிச் செடிப்பகுதியில் மறைந்திருந்த சுயம்பு லிங்க வடிவில் முருகன் காட்சி தர கண்டனர்.
சிவனடியார்கள் நாகத்தைக் கண்டு பயந்ததால் அது கல்லாக மாறியது. அவர்கள் அங்கேயே முருகனுக்கு ஆலயம் அமைத்து வழிபடத் தொடங்கினர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோவிலில் சிறப்புக்கள்
சர்வ தோஷ பரிகாரத்தலம், ராகு கேது தோஷ நிவர்த்தி தலம், சந்திர சூரியனும், 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும், சிவசர்ப்பமும் வழிபடும் தலமாகும்.
முருகனே தன்னை அடையாளப்படுத்திய ஸ்தலமாதலால் இங்கு தமிழ் வருடப் பிறப்பிற்கு பால் குட அபிஷேகம், கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம் தைப்பூசமும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் தன்னை வெளிப்படுத்திய ஆடிக்கிருத்திகை பத்து நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானுக்கு கிருத்திகை அன்று பாலாபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி மலர்களால் அர்ச்சனை செய்து, செம்மாதுளை கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.