
நாக சதுர்த்திக்கு மறுநாள் வரும் கருட பஞ்சமி கருடன் அவதரித்த நன்னாளாகக் கொண்டாடப்படும். வைணவ மரபில் கருடன் 'பெரிய திருவடி' எனப்படுகிறார்.
நாகங்களின் சிறப்பு
இந்தியச் சமய வரலாற்றில் பௌத்த சமண சமயங்கள் பூர்வீகக் குடிகளின் நாக வழிபாட்டை தன்னுள் வாங்கி ஏற்றுக் கொண்டன. புத்தர் தாமரை ஸ்லோகம் சொல்லிய போது அஷ்ட நாகங்கள் உடனிருந்து கேட்டதாகவும், முருகன் பொக்கிஷக் காவலனாக இருப்பதாகவும் அவனுக்கு நாகங்கள் உடனிருந்து உதவுவதாகவும், சாமி சன்னதிகளின் வாசலில் நாகங்கள் காவல் தெய்வமாக இருப்பதாகவும் பௌத்த சமயம் புதிய கதைகளைப் புனைந்தது.
டிராகன்
பௌத்தம் பரவிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஜப்பான் மற்றும் சீனாவிலும் நாகர் வழிபாடு இன்றைக்கும் செல்வாக்குடன் திகழ்கின்றது. அங்கு நாகங்கள் சிறகுகளோடும் நீண்ட காதுகளோடும் 'டிராகன்' என்ற உருவில் கொண்டாடப்படுகின்றன.
சைவ வைணவத்தில் நாகம்
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர், வழிபாட்டு முறைகளை அறுவகைச் சமயங்களாக வகைப்படுத்தினார். அப்போது வாசுகி என்ற ஆண் நாகம் சிவனின் பூணூல் ஆயிற்று.
அம்மனுக்கு ஐந்தலை நாகம் மகுடம் ஆயிற்று. பெருமாளுக்கு அனந்தன் என்ற நாகம் படுக்கை ஆயிற்று. ஆதிசேஷன் இருக்கையும் ஆயிற்று. விநாயகருக்கு நாகம் ஆபரணம் ஆயிற்று. இவ்வாறாக நாக வழிபாட்டை சைவமும், வைணவமும் தன்னுள் ஏற்றுக்கொண்டன. அதற்கேற்ப புதிய புராணங்களும் புதிய கதைகளும் தோன்றின. மக்கள் தொடர்ந்து பல்வேறு வடிவில் நாகங்களை வழிபட்டு வருகின்றனர்.
ஞான ரூபன் கருடன்
புத்த மதத்தில் யானை, சிங்கம், மயில், கருடன், ஆமை, கூகை போன்றவை நற்பண்புகளுக்குரிய சின்னங்களாக போற்றப்பட்டன. அவற்றில் கருடனை பௌத்தர்கள் ஞானத்தின் குறியீடாகக் கொண்டனர். கருடன் தியானி புத்தர் எனப்படும் அமோக சித்தியின் வாகனமாகப் போற்றப்பட்டார்.
பௌத்தர்கள் கருடனைத் தங்கச் சிறகுள்ள பறவை எனப் போற்றினர். நாகம் தென்திசை பகுதிகளின் காவல் தெய்வம். கருடன் வட திசை காவலன் ஆவான். ஞானத்தைக் குறிப்பதில் கருடனை வஜ்ரபாணியுடனும், ஹயக்ரீவருடனும் இணைத்தனர். இதனால் பௌத்தக் கோவில்களில் கருடன் சகல வழிபாட்டுத் தகுதியுடன் தனிச் சாந்நித்யம் பெற்றான்.
வைணவத்தில் கருடன்
பக்தி இயக்கக் காலத்தில் ஆழ்வார்கள் வைணவத்தை பரப்பிய போது பழைய பௌத்த கோயில்கள் சில விஷ்ணு கோயில்களாயின. அமோக சித்தியின் வாகனமாக பௌத்த கோவில்களில் தனி சன்னதி பெற்று விளங்கிய கருடனின் வழிபாடு தகுதியும் சிறப்பும் தொடர்ந்து போற்றப்பட்டது. கருடன் 'பெரிய திருவடி' என்று அழைக்கப்பட்டு தனிச் சன்னதி பெற்றார்.
நவ கருட சேவை
ஆழ்வார் திருநகரியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் நவக்கருட சேவை நடைபெறும். நவதிருப்பதி எனப்படும் திருக்குருகூர் அழகிய நம்பி கோயில் (கேது ஸ்தலம்), திருக்கோவிலூர் வைத்த மாநிதி பெருமாள் (சனி), திரு வரகுண மங்கை காய்சின வேந்தன் பெருமாள் (ராகு), திருப்புளியங்குடி விஜயாசனப் பெருமாள் (சந்திரன்), திருத்தொலைவில்லி மங்கலம் பெருமாள் (குரு), திருக்கோளூர் தேவபிரான் (புதன்), திருப்பேரை மாயக்கூத்தன் (சுக்கிரன்), திருவைகுண்டம் அரவிந்தலோச்சனர் (சூரியன்) கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கருடாழ்வாரின் மீது எழுந்தருளி ஒரே இடத்தில் சேவை சாதிப்பர்.
அவ்வமயம் அங்கு அன்ன வாகனத்தில் நம்மாழ்வாரும் எழுந்தருள்வார். நம்மாழ்வார் மற்றும் மதுரகவியாழ்வாரின் பாசுரங்கள் பாடப்படும். நவ கருட சேவை போல் இன்னும் பல வைணவ கோயில்களில் ஐந்து வருட சேவை நடைபெறுகின்றது. இவை கருடனின் தொடர் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றன.
அமிர்த கலசத்துடன் கருடன்
கோடகனூர் பிருகன் மாதவப் பெருமாள் கோவிலில் கருடனுக்கு சிறப்பிடம் உள்ளது. இத்தலம் நாகதோஷப் பரிகார ஸ்தலம் ஆகும். கருடன் இங்கு அமிர்த கலசத்துடன் தனிச்சந்தியில் இடம் பெற்றுள்ளார்.
கஷ்யப முனிவருக்கு கத்ரு, வினதா என்று இரண்டு மனைவிகள். கத்ருவின் குழந்தை 1000 நாகங்கள். வினதாவின் குழந்தை கருடன். கத்ருவிடம் போட்டியிட்டு வினதா தோற்றுப் போனதால் கத்துருவுக்கு அடிமையானாள். அவளுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவர்கள் இடமிருந்து கருடன் அமுதத்தைப் பெற்று வந்தான். இதுவே, கருடன் அமுத கலசத்துடன் இருக்கும் காட்சி ஆகும்.
இந்திய மண்ணின் மைந்தர்கள் வழிபாட்டில் நாகர் மட்டுமே உண்டு கருடன் கிடையாது. கருடனைக் குறியீட்டு வடிவில் அறிமுகம் செய்தது பௌத்த சமயமாகும். 'நாகத்தை விட கருடன் உயர்ந்தது' என்ற கருத்தை உணர்த்தியது வைணவம் ஆகும்.