சாதி வேறுபாடுகளைக் களைந்த ஞானசம்பந்தர்!

சாதி வேறுபாடுகளைக் களைந்த ஞானசம்பந்தர்!
Published on

சிவத்தொண்டு செய்து, சைவம் தழைத்தோங்க வாழ்வை அர்ப்பணித்த அறுபத்து மூன்று நாயன்மார்களில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரை சைவக் குரவர்கள் என்பர். திருஞானசம்பந்தர், இளம் வயதில், இறைவனால் ஞானப்பால் ஊட்டி அருளப்பட்டு, சிவபிரான் மேல் பதினாயிரம் தேவாரப் பதிகங்கள் பாடினார்.

சம்பந்தரை முருகப்பெருமானின் அவதாரமாகக் கூறுவர். இதனால்தானோ கோயில் திருக்குளக்கரையில் “அம்மா, அப்பா” என்று  அழுது கொண்டிருந்த மூன்று வயது ஆளுடைய பிள்ளைக்கு உமையம்மை ஞானப்பாலூட்ட, “தோடுடைய செவியன்” என்று பாட ஆரம்பித்த குழந்தை, பல அற்புதங்களை நிகழ்த்தி, சமண, புத்த துறவிகளை வாதில் வென்று, தமிழையும், சைவத்தையும் வளர்த்து, “காதலாகிக் கசிந்து” என்று பாடி, இறைவனுடைய சோதியில் துணைவியாருடனும், உற்றமும், சுற்றமும் கூடி ஐக்கியமானார்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்

ஞான சம்பந்தரின் காலம் ஏழாம் நூற்றாண்டு. வேதங்கள் தழைத்தோங்கிய கால கட்டத்தில் வேதத்தினும் உயர்ந்தது இறைவனின் ஐந்தெழுத்து மந்திரம் என்று வாதிட்டார். “வேதம் நான்கினும் மெய் பொருளாவது நாதனாம நமச்சிவாயவே” என்கிறது ஞானசம்பந்தரின் தேவாரம். அவரை “வேதத்தை ஓதாதுணர்ந்த முத்தமிழ் விரகன்” என்பர். அவருடைய உபநயனச் சடங்கு அன்று அந்தணர்களுக்கு சடங்குகளில் உள்ள ஐயப்பாடுகளை நீக்கி, எல்லா மந்திரங்களுக்கும் காரணமாயிருப்பது சிவபெருமானது திருவைந்தெழுத்தேயாம் என்பதை உணர வைத்தார்.

இறைவனை அடைய மொழி தடையல்ல என்ற சம்பந்தர், செந்தமிழ் பாடல்களைப் பாடி இறைவனை அடைய முடியும் என்று நிரூபித்தார். தன்னைத் “தமிழன்” என்றும் “முத்தமிழ் விரகன்” என்றும் கூறிக் கொள்வதில் பெருமை கொண்டார். “ஞான சம்பந்தன் உரை செய்த திருநெறிய தமிழ்” என்று தான் பாடிய தேவாரத்தைக் கூறினார். ஞான சம்பந்தரை “நாளு மின்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார். தமிழ் பக்தி இலக்கியம் வளர சம்பந்தரின் தொண்டு அளவிடற்கரியது.

திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர்

அல்லும் பகலும் சிவபெருமானை உள்ளத்தில் நிறுத்தி திருத்தொண்டு செய்வோர்க்கு நாளும், கோளும் ஒரு தீங்கும் செய்யாது என்று கோளறு பதிகம் பாடினார். கோளறு பதிகம் பாராயணம் செய்வோரை கிரக தோஷம் தீண்டாது என்றார் காஞ்சி மா முனிவர். கோளறு பதிகத்துக்கும், இந்தியா சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15, 1947க்கும் தொடர்பு உண்டு. திருவாவடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த ஓதுவார் “கோளறு திருப்பதிகம்” முழுவதையும் பாடி, கடைசிவரியான “அரசாள்வார் ஆணை நமதே” என்று பாடி முடித்தவுடன், ஆதினத்தின் இளைய தம்பிரான் சுவாமி, ஜவஹர்லால் நேருவிடம் செங்கோலைக் கொடுக்க இந்தியாவிற்கு ஆட்சி மாற்றம் வந்தது. ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தரால் பாடப்பட்ட பாடல் இருபதாம் நூற்றாண்டில் இந்திய சுதந்திர தினத்தன்று பாடப்பட்டது தமிழுக்குப் பெருமை.

இதையும் படியுங்கள்:
இல்லறத்தாருக்கு இரண்டு மந்திரங்கள்!
சாதி வேறுபாடுகளைக் களைந்த ஞானசம்பந்தர்!

சம்பந்தர் இருந்த காலகட்டத்தில் சமண மதமும், பௌத்த மதமும் தமிழகத்தில் கால் பதிக்கத் தொடங்கின. பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் சமண மதத்தைத் தழுவினான். சிவத் தொண்டு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. சம்பந்தரை அழிக்க நினைத்த சமணத் துறவிகள் அவரிருந்த மடத்திற்கு எரியூட்ட, “சைவர் வாழ் மடத்திற்கு சமணர் இட்ட தீ பையவே சென்று பாண்டியனைப் பற்றட்டும்” என்று பாடினார். வெப்ப நோயினால் அரசன் வாட “மந்திரமாவது நீறு” என்று திருநீற்றுப் பதிகத்தைப் பாடி, திருநீறிட்டு, அரசனின் நோயைப் போக்கினார். பின்னர் வாதில் சமணர்களை வெல்ல, கூன் பாண்டியன் கூன் நீங்கி, பாண்டியன் நெடுமாறன் ஆகி சைவ மதத்தைத் தழுவினான். சமணமும், புத்தமும் தமிழ் மண்ணில் கால் பதித்தாலும், அதை வளரவிடாமல் தடுத்த பெருமை சம்பந்தரைச் சாரும்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்ற நாயனார் யாழிசையில் வல்லவர். அரிசின வகுப்பைச் சேர்ந்தவர். ஏழாம் நூற்றாண்டு காலத்தில் பாணர்கள் கோவிலில் நுழைய அனுமதி இருக்கவில்லை. சம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், அவருடைய துணைவியார் மதங்கசூளாமணி என்ற அம்மையாரையும் தன்னுடைய சீடர்களாக ஏற்றுக் கொண்டார். தான் செல்லுகின்ற கோவில்களுக்கெல்லாம் அவர்களையும் கூட்டிச் சென்றார். சம்பந்தரின் தேவாரப் பண்ணுக்கு யாழ்ப்பாணர் யாழ் இசைப்பார். ஞான சம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரை “ஐயரே” என்று விளிப்பார் என்று சேக்கிழாரின் பெரிய புராணம் கூறுகிறது. ஞான சம்பந்தர் ரிக் வேதி. முத்தீ வளர்க்கும் வேதியர். ஆனால், அவர் சாதி வேறுபாடுகளைக் கருதாமல் யாழ்ப்பாணரைத் தன்னுடன் வைத்துக் கொண்டார்.

தமிழ் வாழும் வரை, தேவாரம் வாழும், சம்பந்தரும் வாழ்வார்.

திருச்சிற்றம்பலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com